தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடுகள் காரணமாக ஆணவக் கொலைகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த கவினின் கொலை ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கவினை காதலித்ததாக சுபாஷினியே ஒப்புக்கொண்டு வீடியோ வெளியிட்டார்.
ஆணவக்கொலைக்கு எதிரான வீடியோ:
கவினை கொலை செய்த சுர்ஜித்திற்கு ஆதரவாகவும், சாதிய ரீதியாகவும் பலரும் வீடியோக்களை வெளியிட்டனர். இது சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆணவக் கொலைகளையும், சாதி வெறியையும் கேலி செய்யும் விதமாக தமிழ்நாட்டின் பிரபல யூ டியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியது.
கோபி - சுதாகருக்கு இந்திய தூதர் பாராட்டு:
கோபி - சுதாகரை பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கோபி சுதாகருக்கு எதிராக சில சமூகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், கோபி சுதாகரை அஜர்பைஜனுக்கான இந்திய தூதர் பாராட்டியுள்ளார்.
அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதராக பதவி வகிப்பவர் பயணிதரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் பல நாடுகளில் தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஆணவ பர்னீச்சர்கள்:
கோபி சுதாகரின் இந்த வீடியோவை பகிர்ந்து அறிவு இல்லாததால் ஏமாறும் கூட்டத்தை வைத்து வஞ்சபுத்தி உள்ள கயவர்களால் கட்டமைக்கப்படும் ஆணவ பர்னீச்சர்கள் சகாய விலையில் பொளேர் பொளேர் என்று உடைத்துத் தரப்படும். கோபி, சுதாகர் & குழுவினர் (முழுவீடியோவையும் பார்த்துவிடுங்கள்) என்று பாராட்டியுள்ளார். அதனுடன் வீடியோ கிளிப்பையும் இணைத்துள்ளார்.
பயணிதரன் ஒருமுறை அஜர்பைஜானில் நடந்த செஸ் போட்டியில் பங்கேற்ற இந்தியர்களை சிறப்பான முறையில் கவனித்துக் கொண்டார். அஜித்குமாரின் விடாமுயற்சி படம் அஜர்பைஜானில் நடந்தபோது அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினரை வீட்டிற்கு அழைத்து விருந்து உபசரிப்பு தந்தார். தொடர்ந்து சமூகம், திரை, புத்தகம் குறித்து தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
சமூகத்தில் நடக்கும் விவகாரங்கள் உள்ளிட்ட பலவன குறித்து கோபி - சுதாகர் தொடர்ந்து நகைச்சுவையாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆணவ கொலைகளுக்கு எதிரான வீடியோ விவகாரத்தில் சிலர் கோபி சுதாகருக்கு எதிராக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.