நடிகர், இயக்குநர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி வெளியாகியுள்ள படம் அயோத்தி.


உண்மை சம்பவங்களை வைத்து அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், சசிகுமார் உடன் ப்ரீத்தி அஸ்ரானி, யாஷ்பால் ஷர்மா, குக்கு வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மத வேறுபாடுகளைத் தாண்டி வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் வரும் குடும்பத்துக்கு உதவும் மனிதத்தைப் பேசும் படமாக அயோத்தி அமைந்திருப்பதாக இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.


கதை யாருடையது?


மேலும் இயக்குநர், நடிகர் சசிகுமார் நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் ரீ - எண்ட்ரி தந்துள்ளதாக கோலிவுட் ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தப் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அயோத்தி படத்தின் கதை தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.


ஒருபக்கம் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் இந்தப் படம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக இப்படத்தின் வெற்றி குறித்து எஸ்.ரா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.


எழுத்தாளர் எஸ்.ரா பதிவு


சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன். படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.


அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள்.


இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.


இன்று அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம்” எனப் பகிர்ந்துள்ளார்.


 



எழுத்தாளர் மாதவராஜ் பதிவு


இந்நிலயில் எழுத்தாளர் மாதவராஜ் என்பவர், ‘அழக்கூடத் திராணியவற்றவர்கள்’ எனும் பெயரில்தான் 2011இல் ஆவணப்படுத்திய கதை எனத் தெரிவித்து காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.


“அயோத்தி திரைப்படம் யாருடைய 'கதை'யும் அல்ல. உண்மை நிகழ்வு. அதில் நேரடியாக பங்கு பெற்ற  இரண்டு தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உயிரோட்டமாய் முதன் முதலில் எழுத்தாக  செப்டம்பர் 2011ல்  ஆவணப்படுத்தியதும் ஒரு கதை போல எழுதியதும் நான். சம்பந்தப்பட்ட அந்த தோழர்களே என் பதிவைப் படித்து விட்டு கண் கலங்கினர். 


நான் எழுதியதன் மூலம் அந்த தோழர்களை எங்கள் சங்கமே கொண்டாடியது. தீராத பக்கங்களில் படித்து விட்டு  பலரும் பாராட்டினர். எல்லாவற்றையும் அப்படியே மறைத்து விட்டு அல்லது புதைத்து விட்டு என் கதை என்றும், என் அறிவுச் சொத்து எனவும் உண்மையை புரட்டுவது யோக்கியமும், அறமும் ஆகாது.


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், அயோத்தி பட தயாரிப்பாளர், இயக்குனருக்கும் என் கண்டனங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.


 



இந்நிலையில், இரு வேறு எழுத்தாளர்கள் அயோத்தி படக்கதையை தாங்கள் எழுதியதாகக் கூறி தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.