ZEE5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு விலங்கு ஃபிங்கர்டிப், எஸ்2 மற்றும் பேப்பர் ராக்கெட் ஆகிய தொடர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டுக்கான தனது முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ’அயலி’ குறித்த அறிவிப்பை ZEE5 வெளியிட்டுள்ளது.


எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், முத்துக்குமார் இயக்கத்தில் உருவான, 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் 8 ஆம் வகுப்பில்  கல்வி பயின்றுவரும்  தமிழ்ச்செல்வி என்ற ஒரு  பதின்மவயது சிறுமியைப்  பற்றிய உணர்ச்சி மிகுந்த சமூக நாடகமாக அயலி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பருவமெய்தியவுடன் பெண் குழந்தைகள் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டியவர்கள் என்று பழமையான பழக்கவழங்கங்களில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் கிராமம், இந்த பாரம்பரிய மரபை கடைபிடிக்காவிட்டால் கிராம தெய்வமான அயலி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்ற நம்பிக்கை, இவற்றை தகர்த்தெறிந்து  மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய போராடும் இளம் சிறுமி என்ற கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொடர் வரும் ஜனவரி 26ஆம் தேதி ZEE5 தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 






முன்னதாக இது குறித்துப் பேசிய ZEE5 தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா “கடந்த ஆண்டு விலங்கு, ஃபிங்கர் டிப் மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற எங்களின் தமிழ் அசல் திரைப்படங்களுக்குக் கிடைத்த வியக்கத்தக்க மாபெரும் வெற்றிகரமான வரவேற்பிற்குப் பிறகு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வழக்கத்திற்கு மாறான கதைக்களத்தைக் கொண்ட மற்றொரு தொடரான அயலியை நாங்கள் வெளியிட உள்ளோம்.


பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய சமூக செய்தியுடன் கூடிய உருவாக்கங்கள் கல்வி அறிவு, மற்றும் தகவல்களை வழங்கி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது என்று ZEE5 இல் உள்ள நாங்கள் நம்புகிறோம். பல பெண்களின்  நம்பிக்கைக்கு தூண்டுகோலாக இத்தொடர் அமைந்து அவர்களையும் அதை நோக்கிச் செலுத்தும் என்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.
 
இயக்குநர் முத்துக்குமார் பேசுகையில் கூறினார், “இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுமக்களின்  கண்ணோட்டத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கக் கூடிய கதைகளை முன்வைக்கின்றன. மேலும்  ஒரு பிரச்சாரமாக தோன்றாத வகையில் அந்த மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் எங்கள் உண்மையான முயற்சிதான் அயலி.


இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி, அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை  அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றான  இந்தக் கதையை காட்சிப்படுத்த எங்களுக்கு ஒரு தளத்தை வழங்கிய ஜீக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்”  எனத் தெரிவித்துள்ளார்.


கிரியேட்டிவ் தயாரிப்பாளரான குஷ்மாவதி கூறுகையில், "பொழுதுபோக்கு துறையில் பெண்களை மையமாகக் கதைகள் ஏராளமாக இருந்தாலும், இந்த கதைகளை நேர்மையாகவும் பயன்தரத்தக்கதாகவும் முன்னிலைப்படுத்த நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். பெண்களை மையமாகக் கொண்ட கதைகளை கண்டறிந்து அதை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு முழுமையான நீதியை அளிப்பதே ஒரு தயாரிப்பாளராக எனது நோக்கம். அயலியை தயாரிப்பதிலும் எனது முயற்சி  அதை நோக்கியே இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.