தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் பலருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முன் உதாரணம். இவர் தனது ஊடக வாழ்க்கையை விஜய் டீவியில் தொடங்கி அதன் பின்னர் திரைப்படத்தில் கால்பதித்தார். சரியான கதைத்தேர்வு, தனது உடல் மொழிக்கு ஏற்றவகையிலான கதைத் தேர்வு என தொடக்க காலத்தில் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கு டிவியில் இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை திருப்திபடுத்திக்கொண்டு வந்தார்.


அதன் பின்னர் தனது உடலின் மீது தனிக் கவனம் செலுத்தி சவாலான கதாப்பத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இதில் ஒரு சில படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் பெரும்பாலான படங்கள் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரத்தில் ஒன்றாக கொண்டுவந்து வைத்துள்ளது.


இவரது படங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைப்பதால், சிவகார்த்திகேயனுக்கு படம் செய்வதால் டபுள் ஓ.கே என்ற நிலைக்கு உயர்ந்தும் உள்ளார் சிவகார்த்திகேயன். இதுமட்டும் இல்லாமல் விழாக்காலங்களில் படங்களை ரிலீஸ் செய்து வெற்றி காணும் அளவிற்கு ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலை குறிவைத்து வந்துள்ளது.


இந்த படம் நேற்று அதாவது ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.  இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.


பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளத்தின் பதிவின்படி,  முதல் நாள் கலெக்‌ஷனில் சுமார் 4 கோடிகளை அயலான் திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் அந்த வலைதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒருநாள் மட்டும் காலை, மதியம், மாலை மற்றும் இரவுக் காட்சிகள் என நாடு முழுவதும் மொத்தம் ஆயிரத்து 54 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இதில் வசூலான தொகை ரூபாய் 4 கோடி என அந்த வலைதளம் கூறியுள்ளது. 


 






 இன்று நேற்று நாளை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏலியன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஏலியனுக்கு டப்பிங் பேசி இருப்பது கூடுதல் சிறப்பு.


அயலான் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அயலான் படத்தில் தொழில்நுட்பரீதியாக எந்த வித சமரசத்தையும் படக்குழு செய்யவில்லை என்று ப்ரோமோஷன்களில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதற்கு ஏற்ற வகையில் அயலான் படத்தின் வி எஃப் எக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.


மேலும் இந்த பாராட்டுக்கு உச்சமாக பிரபல ஒளிப்பதிவாளரும் அயலான் படத்தில் பணியாற்றியவருமான நிரவ் ஷா வெகுவாக படத்தைப் பாராட்டியுள்ளார். அயலான் படத்தில் இந்தியாவில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு சிறந்த வி.எஃப் .எக்ஸ் காட்சிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.