AVM Saravanan Passed Away: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன், தங்களது நிறுவனத்தை தனித்துவமாக மாற்றியது எப்படி? என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஏவிஎம் சரவணன் காலமானர்:

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக கோலோச்சிய ஏவிம் சரவணன், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக இன்று அதிகாலை காலமானார். தனது தந்தையால் தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, 178 திரைப்படங்களை தயாரித்தார். ரஜினி,கமல் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களை கொண்டு பெருவெற்றி படங்களை தந்து லாபம் ஈட்டிய நிறுவனம் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமா வளரவும், அதுசார்ந்த ஊழியர்கள் பலன் பெறவும் பெரும் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஏவிஎம் சரவணன் ஏன் தனித்துவமானவர்? திரைத்துறை ஏன் அவரை கொண்டாடுகிறது? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

சரவணன் பின்பற்றிய கொள்கைகள்:

1. நிதி பயன்பாட்டில் விவேகம்:

தெளிவான, சாத்தியமான பட்ஜெட் இல்லாமல் எந்தப் படத்தின் படப்பிடிப்பு  பணிகளும் தொடங்கப்படக்கூடாது என்ற கடுமையான விதியை அவர் அமல்படுத்தினார். ஆபத்தைக் குறைக்கும் வகையில், பெரும் லாபத்தைத் துரத்துவதை விட, லாபத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்ததினார். 1990களின் பிற்பகுதியில், தயாரிப்புச் செலவுகள் உயர்ந்தபோது, ​​இந்த ஒழுக்கத்தைப் பேணுவதற்காக ஏவிஎம் தற்காலிகமாக ஐந்து ஆண்டுகள் திரைப்படங்களிலிருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

2. தொழில்நுட்ப பயன்பாடு:

புதுப்புது தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் ஏவிஎம் நிறுவனம் பிரபலமானது. அதிலும் சரவணன் தலைமை பொறுப்பிற்கு வந்த பிறகு நவீன திரைப்பட தொழில்நுட்ப அம்சங்களை, தங்களது படங்களில் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார்.  ரஜினிகாந்த நடிப்பில் உருவான ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் வந்த அனிமேஷன், நேரடியாக இணையத்தில் வெளியிடுவதற்காக இதுவும் கடந்து போகும் என்ற படத்தை தயாரித்து யூட்யூப் தளத்தில் வெளியிட்டு மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தது ஆகியவை ஏவிஎம் சரவணனின் தொலைநோக்கு பார்வைக்கான எடுத்துகாட்டாகும்.

3. திறமையாளர்களுக்கு வாய்ப்பு

புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதில் ஏவிஎம் நிறுவனத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த நடைமுறையானது சரவணன் காலத்திலும் நிறுவனம் தொடர்ந்துள்ளது. இந்த முன்னணி தயாரிப்பு நிறுவனம் தான் தமிழ் சினிமாவின் முகங்களாக கொண்டாடப்படும் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மற்றும் ரஜினி ஆகியோரை அறிமுகப்படுத்தியது.

4. காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை ஏற்ற சரவணன்

உயர்ந்த நடிகர்களின் சம்பளம், அரசியல் அழுத்தங்கள் மற்றும் புதிய போட்டியாளர்கள் போன்ற பிரச்னைகளால் திரைத்துறை சவால்களை எதிர்கொண்ட போது, ஏவிம் நிறுவனத்தை தொலைக்காட்சி தொடர்கள் பக்கமாக சரவணன் பன்முகப்படுத்தினார். தரமான கதைக்களத்துடன் கூடிய சீரியல்களை ஆயிரக்கணக்கான எபிசோட்களுடன் தயாரித்தார். காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு ஒடிடி தளத்தில் கால் பதிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

5.பாரம்பரியத்தை பின்பற்றிய சரவணன்

ஏவிஎம் ஸ்டுடியோவில் நவீனமயமாக்கல் இருந்தபோதிலும், நிறுவனர் ஏ.வி. மெய்யப்பன் பின்பற்றிய முக்கிய மதிப்புகள் அப்படியே தொடர்வதை சரவணன் உறுதி செய்தார். அதில் நுணுக்கமான, தொழிற்சாலை போன்ற தயாரிப்பு செயல்முறை, ஊழியர் நலனுக்கான அர்ப்பணிப்பு மற்றும் வலுவான தார்மீக திசைகாட்டியுடன் குடும்பம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரித்தல் ஆகியவை அடங்கும்.

ஏவிம் சரவணனின் இத்தகைய பண்புகளால் அவரது தலைமையிலான நிறுவனம் வளர்ச்சி கண்டதோடு, தமிழ் சினிமா இன்று கண்டுள்ள வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அடக்கம், மரியாதை, மனிதநேயத்துடன் செயல்பட்டதன் காரணமாக துறைசார்ந்து மட்டுமின்றி தனிநபராகவும் ஏவிஎம் சரவணன் கொண்டாடப்பட்டார்.