நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘போக்கிரி ராஜா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த அருணா குகன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த போக்கிரி ராஜா
1982 ஆம் ஆண்டு கமர்ஷியல் இயக்குர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘போக்கிரி ராஜா’. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படம் 1980 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படமான சுட்டலுன்னாரு ஜாக்ரதா படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய ஏவிஎம் சரவணன், அதில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் தெலுங்கு படம் பார்த்த ரஜினி இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார். இதனால் ஏவிஎம் சரவணன், மறைந்த இயக்குநர் விசுவை அழைத்து விவரத்தை சொல்லியுள்ளார். உடனே விசு அப்படத்தை பார்த்து சிறிய மாற்றங்களுடன் தமிழில் ரீமேக் செய்யலாம் என தெரிவிக்க கடைசியில் ரஜினி நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இதில் ராதிகாவுக்கும் அதிக காட்சிகள் வைக்கப்பட்டது.
இந்த படம் தான் பழம்பெரும் இயக்குநர் முத்துராமனின் கடைசிப்படமாகும். எதிர்மறையான பாத்திரத்தில் நடித்த அவர், ரிலீசுக்கு முன்னரே மரணமடைந்தார். அவருக்கு வேறொருவர் சில காட்சிகளில் டப்பிங் கொடுத்திருப்பார். இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்டது போக்கிரி ராஜா படம்.
ரசிக்க வைத்த பாடல்கள்
கடவுள் படைச்சான், போக்கிரிக்கு போக்கிரி ராஜா, வாடா என் மச்சிகளா, விடிய விடிய சொல்லித்தருவேன் என கண்ணதாசன், கங்கை அமரன் எழுதிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 1982 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் ஒரு ரஜினி மேல் கொலை பழி விழ, அதனை இரண்டு ரஜினிகளும் இணைந்து உண்மை குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
அருணா குகன் பகிர்ந்த புகைப்படம்
இதனிடையே ஏவிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த அருணா குகன், போக்கிரி ராஜா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார். போக்கிரிக்கு போக்கிரி ராஜா பாடல் படப்பிடிப்பின் போது அந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. இதில் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவும் இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளளது.