நடிகர் கமல்ஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 






தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா படங்களை பல முன்னணி நடிகர்களை வைத்து தயாரித்த ஏவிஎம் நிறுவனம் தற்போது படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி வெப் சீரிஸ் தொடர்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனம் மீண்டும் முழுநேர படத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதன்  தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஏவிஎம் நிறுவனத்தின் படங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவலை வெளியிடுவார். 






அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு கமல், ராதா, சுலக்‌ஷனா, கவுண்டமணி, ஜனகராஜ், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி தூங்காதே தம்பி தூங்காதே  படம் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். இளையராஜா இசையமைத்த இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். பஞ்சு அருணாச்சலம் கதை எழுதிய இப்படம் கமலின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். 






இந்த படத்தில் நானாக நானில்லை தாயே, சும்மா நிக்காதீங்க உள்ளிட்ட அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி நவம்பர் 4 ஆம் தேதியுடன் 39 வருடங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் இப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சி குறித்த தகவல் ஒன்றை அருணா குகன் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நாள் தயாரிப்பாளர் எஸ்.லட்சுமணன் என் தாத்தாவைப் பார்க்க வந்தார். தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினி நடித்த 'தில் ஹை ஹீரா' என்ற ஹிந்தி படத்தை "இதயம் பேசுகிறது" என்ற பெயரில் மணியனுடன் இணைந்து தயாரித்தார். அவர்கள் இந்த படத்திற்கு ரூ.10 லட்சம் செலவழித்து நிறைய சிரமம் எடுத்து கிளைமாக்ஸ் காட்சியை எடுத்தனர்.






ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி  பெறவில்லை. மேலும் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன என்று லட்சுமணன் புலம்பினார். உடனே என் தாத்தா க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கலாமா என்று கேட்டார். அதைப் பார்த்துவிட்டு மிகவும் கவரப்பட்ட அவர், எங்கள் படத்தில் இந்த கிளைமாக்ஸ் காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்.


அதற்கு லட்சுமணன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.எங்களுக்கு அந்த காட்சியை தர முன்வந்தார். பின் ரூ. 30 ஆயிரம் என்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு க்ளைமாக்ஸ் காட்சியை தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் எங்கு சேர்ப்பது என்று பஞ்சு அருணாச்சலத்துக்கு தெரியவில்லை. உடனே விசு சாரை அழைத்து அவருக்கான காட்சியை எடுத்தார்கள். அவரது ஆலோசனையின் பேரில் செந்தாமரை சார் நடிக்க வேறொரு கேரக்டரை சேர்க்க முடிவு செய்தனர்.


கிளைமாக்ஸ் காட்சியை வேறொரு படத்திலிருந்து எடுத்து எங்களுடைய படத்தில் பயன்படுத்துவது அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. மும்பையில் இந்தி படத்தின் கிளைமாக்ஸ் படமாக்கப்பட்ட அதே இடத்தில் தூங்காதே தம்பி தூங்காதேவின் இணைப்புக் காட்சியும் படமாக்கப்பட்டது. 






இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளையும் இணைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இறுதியில் எங்கள் தொழில்நுட்பக் குழுவினர் அதை தங்கள் திறமையால் செய்து முடித்தனர், இந்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கும் நாங்கள் படமாக்கிய காட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் எஸ்.பி.முத்துராமன் மற்றும் எடிட்டர் விட்டலின் திறமை தான் என அருணாகுகன் கூறியுள்ளார்.