பிரம்மாண்டமான எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் டிக்கெட் விலை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் சில நகரங்களில் இப்படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரீமியம் திரையரங்குகளில் படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்கள் அதிக தொகை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

டிசம்பர் 17 வெளியாகும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அந்தோணி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், புளோரன்ஸ் பக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ராபர்ட் டவுனி ஜூனியர், இப்படத்தில் விக்டர் டூம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிறிஸ் எவன்ஸ் மீண்டும் ஸ்டீவ் ரோஜர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ், ஃபென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ்-மென் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து டாக்டர் டூமை எதிர்கொள்வதே படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

Continues below advertisement

2019ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்திற்குப் பிறகு அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்கள் மீண்டும் ஒன்றிணைவதால் இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக இந்தியாவில் மார்வெல் திரைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் காரணமாக தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இந்தியாவில் டிசம்பர் 17ஆம் தேதியும், அமெரிக்காவில் டிசம்பர் 18ஆம் தேதியும் படம் வெளியாக உள்ளது.

இந்தியாவில் இப்படத்திற்கு இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை

மும்பையில் ரூ.320 முதல் ரூ.4,000 வரையிலும், பெங்களூருவில் ரூ.500 முதல் ரூ.3,000 வரையிலும் டிக்கெட் விலை உள்ளது. டெல்லியில் ரூ.330 முதல் ரூ.2,300 வரையிலும், ஹைதராபாத்தில் ரூ.225 முதல் ரூ.774 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குறைந்தபட்சம் ரூ.61 முதல் அதிகபட்சம் ரூ.260 வரை டிக்கெட் விலை உள்ளது. 

இந்த அதிகபட்ச டிக்கெட் விலைகள் சாதாரண திரையரங்குகளுக்கானவை அல்ல. 4DX 3D போன்ற அதிநவீன திரையிடல் தொழில்நுட்பம், பிரீமியம் இருக்கைகள் மற்றும் சொகுசு திரையரங்குகளில் இடம்பெறும் சிறப்புக் காட்சிகளுக்கானவை. குறிப்பாக, மும்பையில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கின் 4DX 3D காட்சிக்கு ரூ.4,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முன்பதிவு வசூல்

டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு இந்தியாவில் முன்பதிவு தொடங்கியதில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை இப்படம் இந்தியாவில் ரூ.40 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டியுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான முன்பதிவு வசூல் பதிவாகியுள்ளது.