சினிமா ரசிகர்களை ஹாலிவுட் திரையுலகம் என்றுமே ஏமாற்றியதில்லை. அனைத்துலக சினிமாவிற்கும், பிரம்மாண்டத்தின் அர்தத்தை டைட்டானிக் படத்தின் வாயிலாக உணர்த்தியவர் ஜேம்ஸ் கேமரூன். இந்த படத்தின் பிரம்மாண்டத்தை அப்படியே விழுங்கியது, அவரது அடுத்த படைப்பான அவதார்.
2009 ஆம் ஆண்டில் வெளியான அவதார் திரைப்படம், டைட்டானிக்கின் Highest Grossing Film (மிக அதிக வசூல் செய்த திரைப்படம்) எனும் ரெக்கார்டை ப்ரேக் செய்தது. 3டி வடிவில் உருவான இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வேற்று கிரகத்தில் வாழும் நாவி இன மக்களின் வளங்களை திருடும் மனிதர்கள், அதற்கு எதிராக போராடும் நாவி மக்கள், இவர்களுக்கு துணையாக நிற்கும் ‘ஹைப்ரிட்’ அவதாரான ஹீரோ, இவர்களைச் சுற்றி சுழலும் சையின்ஸ் பிக்ஷன் கதைதான் அவதார்.
அவதார் படத்தின் இரண்டாம் பாகம், அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar:The Way Of Water) என்ற பெயரில் டிசம்பர் 16ஆம் தேதி வெளியவர இருக்கிறது. இப்படத்தின் 2 ட்ரெய்லர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அவதார் படத்தில் இடம் பெற்றுள்ள பல காட்சிகள், எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பாரப்பது போல பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட சில காட்சிகளை இங்கே காண்போம்..
ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இடங்கள்:
அவதார் படத்தில் ஹீரோவாக வரும் ஜேக் சல்லியின் கால்கள் கதைப்படி செயலிழந்து இருக்கும். அத்தனை நாட்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவனுக்கு, அவதார் உருவம் கிடைத்தவுடன் மகிழ்ச்சியல் நடப்பதும், ஓடுவதும் குதிப்பதும் பார்ப்பவர்களையே பரவசமடையச் செய்யும். அது மட்டுமன்றி, படத்தின் ஒரு பாதி வரை தன்னுடைய கமான்டரின் பேச்சைக் கேட்டு, அவரிடம் ரிபோர்ட் செய்யும் ஹீரோ, கடைசியில் அவர்களையே எதிர்த்து போராடுவது அனைவரின் அப்ளாஸ்களை அள்ளும் அம்சங்களுள் ஒன்று.
ஹீரோயினின் அறிமுகம்:
அவதாராக மாறும் ஜேக்கிற்கு நாவி இன மக்களின் மொழிகளையும், சண்டை செய்யும் கலையையும் கற்றுத் தரும் பெண்ணாக வருபவர் நைட்டிரி(Neytiri). ஆரம்பத்திலிருந்தே, பயமறியாமல் ட்ராகனாக இருந்தாலும் இறங்கி சண்டை செய்யும் இவரின் கதாப்பாத்திரம் படம் பார்த்த பலருக்கும் பிடித்து போனது. முக்கியமாக, முதல் காட்சியிலேயே ஹீரோவையே கொல்ல வருவது போல அமைக்கப்பட்டிருந்த இவரது அறிமுகம் அனைவரையும் ஈர்த்தது.
இக்ரான்-மிருகத்தின் அறிமுகம்:
அவதார் படத்தில், சண்டையிடுவதற்கு பயன்படுத்தப்படும் மிருகத்தின் பெயர் இக்ரான். பிரம்மாண்ட வடிவில் இருக்கும் இந்த மிருகத்துடன் கனெக்ட் ஏற்படுத்தி, ஹீரோ சண்டையிட்டு வெற்றி பெரும் காட்சியும், க்ளைமேக்சில் யாராலும் அடக்க முடியாது என்று கூறப்படும் பெரிய இக்ரானை கடைசியல் ஹீரோ அடக்கும் காட்சியும் பலரை ‘வாவ்’ சொல்ல வைத்தது.
நாவி மக்களின் கூட்டு பிரார்த்தனை காட்சி:
ஜேக் சல்லிக்கு, ஆரம்பம் முதல் இறுதிவரை உதவி செய்பவர்தான், க்ரேஸ் என்ற மருத்துவர். கதைப்படி துப்பாக்கியால் சுடப்படும் இவர், இறக்கும் தருவாய்க்கு சென்றுவிடுவார். அப்போது, இவரின் உயிரை மொத்தமாக இவரது அவதாரின் உடலுக்குள் மாற்ற நாவி இன மக்கள் அனைவரும் ஒன்று கூடி, அவர்களது பாரம்பரிய மரமான ட்ரீ ஆஃப் சோல்ஸ் (Tree Of Souls) மரத்தின் கீழ் அமர்ந்து பிரார்த்தனை செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த மொத்த காட்சியுமே, ரசிகர்களை வாய்பிளக்க செய்தது.
க்ளைமேக்ஸ் சண்டை காட்சி:
தங்களது உலகை மனிதர்களிடமிருந்து, க்ளைமேக்ஸில் பாண்டோராவில் வாழும் மக்கள் போராடுவர். இந்த சண்டையில், பாண்டாேராவை சேர்ந்த பல்வேறு நாவி இன மக்கள் ஒன்று கூடுவர். மனிதர்கள் ஆப்பரேட் செய்யும் ரோபோக்களுக்கும், இக்ரான் போன்ற மிருகங்களின் உதவியுடன் நாவி இன மக்கள் சண்டையிடும் காட்சியும் பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.