இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவாகியுள்ள அவதார்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 


பிரமிக்க வைத்த அவதார் 


ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன், கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கிய  ‘அவதார்’ திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றது. 


 “நவி” என்ற இனத்தினர்  வாழும் மதிப்புமிக்க கனிமமான யூனோப்டானியத்தை வெட்ட, வேற்று கிரகம் ஒன்றான பண்டோராவை மனித இனம் கைப்பற்றுவதே இப்படத்தை அடிப்படை கதையாகும். இதற்காக மனிதன் ஒருவன் நவி இனத்தின் ஆளாக மாற்றி அனுப்பப்படுகிறான். அங்கு செல்லும் அவன் நிலைமையை உணர்ந்து, பண்டோரா உலகத்தை காப்பாற்றப் போராடுவது மீதி கதையாகும். 






எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் அவதார் - 2


கிராபிக்ஸ் காட்சிகள் இவை என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 2 ஆம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த  2 ஆம் பாகத்திற்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது.


கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், இம்முறை கடலில் வாழும் உயிரினங்களையும், கனிம வளங்களையும், பாதுகாக்கும் நவி இன மக்கள் குறித்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவதார்: தி வே ஆப் வாட்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.