நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது அப்படம் கதை திருட்டு குற்றச்சாட்டிலும் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா என பலரும் நடித்துள்ள படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் உதவி இயக்குநரான ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்துள்ளார். 

பராசக்தி படம்

 அவர் அளித்துள்ள மனுவில், நான் 2010ம் ஆண்டு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் செம்மொழி என்ற பெயரில் கதை ஒன்றை பதிவு செய்திருந்தேன். இது 1965ம் ஆண்டு இந்தி திணிப்பை கண்டித்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செம்மொழி கதையை அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம், நான் உதவி இயக்குநராக அவர் கதை, வசனம் எழுதிய பெண் சிங்கம் படத்தின் ஷூட்டிங்கின்போது கூறினேன். ஆனால் அப்போது தன்னை மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியிருப்பதால் கதையை தொடர்ந்து எழுதும்படி எனக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கிடையில் நான் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்த கதையை படமாக்கும் பொருட்டு பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தேன். 

Continues below advertisement

இதில் தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் நடிகர் சூர்யாவிடன் எனது கதையை கொடுத்துள்ளார். அவர் அதனை உதவி இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுக்க அது புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த செம்மொழி கதை கைவிடப்பட்ட நிலையில் தற்போது பராசக்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பராசக்தி படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எனது செம்மொழி கதையையும் பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என கூறியிருந்தார். 

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இரண்டு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து 2026, ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸூக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அனைத்து தரப்பிரனரையும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே பராசக்தி படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வசனங்களை கட் செய்தும், காட்சிகளை நீக்கியும் தணிக்கைத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்த நிலையில் படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இப்படியான நிலையில் கதை திருட்டு வழக்கும் சேர்ந்துள்ளது திட்டமிட்டபடி பராசக்தி வெளியாகுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.