கடலில் மூழ்கி ஜுபீன் கார்க் மரணம்
பிரபல அஸ்ஸாமிய பாடகர் சிங்கப்பூரில் தனது இசை நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் வடகிழக்கு இந்திய இசை திருவிழாவில் ஜுபீன் கார்க் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தார். வரும் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதி அவரது இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் ஸ்குபா டைவிங் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அவரை மீட்டு அவசர முதலுதவி செய்து சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுபீன் கார்க் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 52.
அசாம் மொழியில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடகர் ஜுபீன் கார்க் ஆவார். அசாம் , வங்கம் , இந்தி ஆகிய மொழிகளில் திரையிசை பாடல்களை பாடியுள்ளார். அவரது இறப்பு அசாம் மக்களிடையே பெரியளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜுபீன் கர்கின் எதிர்பாராத மரணத்திற்கு அசாம் குடும்ப நலத் துறை அமைச்சர் அசோக் சிங்கால் தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
'அசாம் தனது மகனை இழந்துவிட்டது' என அவர் தனது இரங்கலைத் தொடங்கியுள்ளார் " எங்கள் அன்பான ஜுபீன் கார்க்கின் அகால மறைவால் மிகவும் வருத்தமடைகிறேன். அசாம் ஒரு குரலை மட்டுமல்ல, ஒரு இதயத் துடிப்பையும் இழந்துவிட்டது. ஜுபீன் டா ஒரு பாடகரை விட மேலானவர், அவர் அசாம் மற்றும் தேசத்தின் பெருமை, அவரது பாடல்கள் நமது கலாச்சாரம், நமது உணர்ச்சிகள் மற்றும் நமது ஆன்மாவை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்றன. அவரது இசையில், தலைமுறைகள் மகிழ்ச்சி, ஆறுதல் மற்றும் அடையாளத்தைக் கண்டன. அவரது மறைவு ஒருபோதும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. அசாம் அதன் அன்பான மகனை இழந்தது, இந்தியா அதன் சிறந்த கலாச்சார சின்னங்களில் ஒருவரை இழந்தது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும், மேலும் அவரது மரபு என்றென்றும் ஊக்கமளிக்கட்டும்." என அவர் பதிவிட்டுள்ளார்