தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் அசோக் செல்வன் சூது கவ்வும், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர் தொழில் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அவருக்கும் நடிகர் அருண்பாண்டியனின் மகளும், தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவை அனைத்திற்கும் தகுந்த பதிலடியை கொடுத்து இருந்தார் நடிகர் அசோக் செல்வன். 



சபாநாயகன் எப்படி?


இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் காமெடி ஜானரில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் 'சபாநாயகன்'. அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'சபாநாயகன்' திரைப்படம் பள்ளி, கல்லூரியில் ஏற்பட்ட காதல் கதைகளை வைத்து நகைச்சுவை கலந்த ஒரு படமாக அமைக்கப்பட்டு இருந்தது. 


வழக்கமான ஒரு திரைக்கதை தான் என்றாலும் போலீஸிடம் காதல் கதைகளை சொல்வது போல ஒரு வித்தியாசமான சூழலில் படம் உருவாகி இருந்தது. வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு இருந்த படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒட்டுமொத்தத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது  'சபாநாயகன்' படம். 



அசோக் செல்வன் அசத்தல் பதில் :


இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றபோது, கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது குறித்து அசோக் செல்வனின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அசோக் செல்வன் "நான் கீர்த்தி பாண்டியனோட 'ஓனர்' கிடையாது. 'பார்ட்னர்' தான். அவருக்கு என்ன பிடிக்குமோ அதை அவர் செய்வதில் தான் என்னுடைய சந்தோஷம் உள்ளது. நாங்கள் இருவருமே தனித்தனி நபர்கள்தான்" என பதிலளித்து இருந்தார். அசோக் செல்வனின் இந்த அசத்தலான பதிலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 


கீர்த்தி பாண்டியனின் கண்ணகி :


கடந்த வாரம் தான் அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலீன் ஜோயா, மயில்சாமி உள்ளிட்டோரின் நடிப்பில் 'கண்ணகி' திரைப்படம்  வெளியானது. சமகாலத்தில் வாழும் நான்கு பெண்கள் சந்திக்கும் பெண்ணியம் சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றன.