நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வருகிறார் இளம் நடிகரான அசோக் செல்வன்; சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீப காலமாக அவர் படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.
பிட்சா 2, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய் என தொடக்க காலத்தில் கவனமீர்த்த படங்களில் நடித்த அசோக் செல்வன் 2020ஆம் ஆண்டு ஓ மை கடவுளே படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்த அசோக் செல்வன் நடிப்பில், இந்த ஆண்டு மட்டும் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என ஐந்து திரைப்படங்கள் வெளியாகின.
கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோக் செல்வன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான வரலாற்று திரைப்படம் 'மரைக்கார்'. இப்படத்தில் அவருக்கு ஒரு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆண்டிற்கு ஒன்று இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்த அசோக் செல்வன் சமீபகாலமாக தனது பாலிசியை மாற்றி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை பற்றின எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதை எதையும் சட்டை செய்யாமல் தன்னுடைய வழியில் சிறப்பாக பயணித்து வருகிறார்.
அசோக் செல்வன் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது குறித்து சமீபத்தில் அவருடன் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் "ஒரு படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கவனம் சிதறும் அதனால் அதை முழுமையாக முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்து நடித்து வந்தேன். ஆனால் என்னுடைய சிந்தனை தவறானது என்பதை புரிய வைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் ஒருமுறை என்னை அழைத்து ஒரு படம் முடியும் வரை அதில் மட்டுமே நடிக்க வேண்டும் என ஒன்றும் இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க வேண்டும்.
எந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதை கணிக்க முடியாது. எனவே ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என காத்து இருந்தால் அதுவே பின்னர் உங்கள் பயணத்தில் ஒரு முட்டுக்கட்டையாக அமைந்து விடும். அதனால் வாய்ப்புகள் வரும் போதே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் சொன்னதில் இருந்து தான் நான் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறேன். அவர் சொன்ன மாதிரி நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடித்து முடித்த திரைப்படம் 'வேழம்'.
அப்போதே வெளியாக வேண்டிய திரைப்படம் இந்த ஆண்டு தான் வெளியானது. இனிமேல் தொடர்ந்து பல படங்களில் நடிப்பேன் என கூறியிருந்தார் நடிகர் அசோக் செல்வன்.விஜய் சேதுபதி மற்றும் அசோக் செல்வன் இருவரும் சூது கவ்வும், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.