பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் பாடகியான ஆஷா போஸ்லேவுக்கு 92 வயதாகிறது. சுமார் 70 ஆண்டுகளாக தனது மாயாஜால குரலால் இந்திய சினிமாவை கட்டிப்போட்ட அவர் மறைந்த செய்தி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறியுள்ளது. ஆஷா போஸ்லேவின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 13ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், இந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஏப்ரல் 11ம் தேதி உடல்நலக்குறைவால் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடினர். கடுமையான சோர்வு மற்றும் நெஞ்சுத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக ஆஷாவின் பேத்தி ஜனாய் போஸ்லே தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியத் திரையுலகின் மிகவும் வெற்றிகரமான பிரபலமான மற்றும் அதிகப் பாடல்களைப் பாடிய பாடகிகளில் ஒருவரான ஆஷா போஸ்லே திகழ்ந்தார். பதினெட்டு மகாராஷ்டிர மாநில திரைப்பட விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன் என பல பல்வேறு விருதுகளை அவர் வென்றுள்ளார். ஆஷா போஸ்லே பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார். 2013ம் ஆண்டு மை திரைப்படம் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார்.
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி தான் ஆஷா போஸ்லே. இவர் கண்பத்ராவ் போஸ்லே என்பவரை 1949ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் 1960ம் ஆண்டு பிரிந்தனர். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அதேசமயம் 1980ம் ஆண்டு ஆர்.டி.பர்மன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
