நடிகர் விஜய் அரசியலில் வந்தால் ஓட்டுப்போட மாட்டேன் என அரவிந்த்சாமி சொன்னதாக வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன என்பதை பற்றி காணலாம். 


தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், மன்சூர் அலிகான், கமல்ஹாசன், கார்த்திக், பாக்யராஜ், விஜயகாந்த், கருணாஸ், சரத்குமார் ஆகிய பிரபலங்களை தொடர்ந்து நடிகர் விஜய்யும் அரசியலில் களம் கண்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள அவர், இன்னும் 2 படங்களுக்குப் பின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்வைத்து முழுநேர மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். 


இப்படியான நிலையில் நடிகர் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என நடிகர் அரவிந்த்சாமி சொன்னதாக வீடியோ ஒன்று வைரலானது. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால் உண்மையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த நேர்காணலில் அரவிந்த்சாமி பங்கேற்று பதிலளித்துள்ளார்.


அந்த நேர்காணலில் அவரிடம் “ரஜினி, கமல், விஜய் ஆகிய 3 பேருக்கும் அரசியல் ஆர்வம் உள்ளது. இதில் உங்கள் சப்போர்ட் யாருக்கு?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அரவிந்த்சாமி, “யார் அரசியல் வந்தாலும் நான் வரவேற்கிறேன். நான் ரஜினி மற்றும் கமலின் மிகப்பெரிய ரசிகன், விஜய்யை எனக்கு பிடிக்கும் என்பதால் நான் ஓட்டுப் போட மாட்டேன்.  மத்தவங்க எப்படி பண்றாங்கன்னு நான் சொல்ல விரும்பல. நீங்க சொல்ற விஷயத்துல உங்களால மாற்றம் வருகிறதா?, உங்களால் முடியுமா?, உங்க நல்ல எண்ணம், நோக்கம் முதலில் என்னை கவர வேண்டும். 


நீங்க ஒரு நல்ல நடிகர். உங்களுக்கு அரசின் திட்டங்களை உருவாக்குவதற்கான தகுதி இருக்குன்னு நான் எப்படி நம்ப முடியும்?. உங்களுக்கென்ற நோக்கம் இருக்கலாம். நம்பிக்கை இருக்கலாம். நீங்க படத்தில் மக்களை காப்பாற்றுவது போல இதிலும் காப்பாற்றுவேன் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் நீங்க ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு, திட்டங்களை உருவாக்குவதற்கு என்ன கற்றுக்கொண்டீர்கள்?. இதையெல்லாம் நீங்கள் பண்ண முடியாது என நான் சொல்லவில்லை.  செய்ய முடியும். உங்களை சுற்றி நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள், சரியாக செய்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் என்பதற்கு அனுபவம் வேண்டும் அல்லவா!






அரசியல்வாதிகள் எல்லாம் அவர்கள் இளமை காலத்தில் இருந்தே இந்த விஷயத்தில் நிறைய கற்றுக் கொண்டிருப்பார்கள். என்னை பொறுத்தவரை ஜனநாயகத்தில் ஒரு அரசியல்வாதி என்பவர் சாதாராண ஒரு மனிதராக இருக்க வேண்டும். எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. என்னால் என்ன பண்ண முடியும் தான் என்ற எண்ணம் இருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.