மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில், தான் நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய்.
மகிழ் திருமேணி
தடையற தாக்க, மீகாமன் , தடம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகிழ் திருமேணி. விறுவிறுப்பான த்ரில்லர்களை தனது ஸ்டைல் படங்களாக எடுத்து வருகிறார். தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா , ஆரவ், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது, முழுக்க முழுக்க துபாயில் நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் குமாருடன் படக்குழுவினரின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
நான் ஏன் நடிக்கவில்லை?
மகிழ் திருமேணி இயக்கிய தடையற தாக்க, தடம் உள்ளிட்டப் படங்களில் நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் அஜித் குமார் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார், இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் சரிந்து இருந்த அருண் விஜயின் மார்கெட்டை இந்தப் படம் உயர்த்தியது.
தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இந்தப் படத்தை குறித்து பகிர்ந்துள்ளார் அருண் விஜய். விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியவுடன் தான் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு ஃபோனில் பேசியதாகவும், மகிழ் திருமேனிக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும், என்று அவர் தெரிவித்தார். மேலும் தான் தற்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருவதும், வேறு எந்த படத்திலும் நான் நடிக்க வாய்ப்பில்லை, என்று அவருக்கு தெரியும். அதனால் இந்த படத்தில் அவர் என்னை அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்’
மிஷன் சாப்டர் - 1
தற்போது அருண் விஜய் நடித்து ஏ.எல் விஜய் இயக்கியிருக்கும் படம் மிஷன் சாப்டர் 1. எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடித்து ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 12-ஆம் தேதி மிஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.