நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலேயே இயக்குநருக்கும் தயாரிப்பு நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Continues below advertisement

குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம், விருமன் உள்ளிட்ட கிராமத்து கதைக்களம் மற்றும் அதிரடி படங்களை இயக்கி ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் முத்தையா. தற்போது அவர், அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை மிர்னா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை 'திரெளபதி 2' படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் தயாரித்து வருகின்றனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. சுமார் 45 நாட்கள் இடைவிடாத படப்பிடிப்பை நடத்த இயக்குநர் முத்தையா திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

படப்பிடிப்பை நிறுத்திய முத்தையா

ஆனால், படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே இயக்குநர் முத்தையாவுக்கும் தயாரிப்பு நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, 'பிரம்மன்' படத்தை இயக்கிய சாக்ரடீஸ், இந்தப் படத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசராக செயல்பட்டு வருகிறார். தயாரிப்பு தொடர்பான சில முடிவுகள் குறித்து முத்தையாவுக்கும் சாக்ரடீஸுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடைந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதன் காரணமாக, முதல் கட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே முத்தையா படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, படக்குழுவினரை சென்னை திரும்ப அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திட்டமிட்டபடி முதல் கட்ட பணிகள் நிறைவடையாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இயக்குநர் முத்தையாவுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடு சுமுகமாக தீர்க்கப்படும் வரை படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,  'திரெளபதி 2' தயாரிப்பின்போது தயாரிப்பாளர்களுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய படத்தின் தயாரிப்பிலும் கூடுதல் நிதி அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறதுஇதனால், அருண் விஜய் - முத்தையா கூட்டணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.