நந்தா மற்றும் பிதாமகன் இரண்டு திரைப்படங்களும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்த படங்கள். பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் 'வணங்கான்' திரைப்படம் மூலம் சேர்வதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.
கைவிடப்பட்ட கூட்டணி :
சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் இப்படத்தின் தயாரிப்பையும் அவரே ஏற்றார். சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி மற்றும் ஜி.வி. பிரகாஷின் இசை என முடிவாகி படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் சில நாட்கள் நடைபெற்றது. ஆனால் திடீரென இந்த கூட்டணி கைவிடப்பட்டதாக தெரிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இது சம்பந்தமாக இருதரப்பினரும் அவரவர்களின் அறிக்கையை வெளியிட்டனர்.
சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் :
கைவிடப்பட்ட இந்த கூட்டணியால் வணங்கான் திரைப்படத்தின் நிலை குறித்து மிகவும் ஆர்வமாக இருந்தனர் ரசிகர்கள். சூர்யா கதாபாத்திரத்துக்காக வேறு ஒரு ஹீரோவை இயக்குனர் பாலா தேடி வருவதாக தகவல் வெளியானதும் ஏராளமான யூகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. தற்போது அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'வணங்கான்' சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். அந்த வகையில் நடிகர் பாலாவுடன் முதல் முறையாக வணங்கான் திரைப்படம் மூலம் கூட்டணி சேரவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இயக்குனர் பாலா அவரின் சொந்த தயாரிப்பில் இப்படத்தை எடுக்க உள்ளார் எனும் தகவலும் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.