ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் அருண் விஜய்யின் அடுத்த படமான ’அச்சம் என்பது இல்லையே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.


அச்சம் என்பது இல்லையே:


யானை, சினம் படங்களைத் தொடர்ந்து  அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் அச்சம் என்பது இல்லையே. அருண் விஜய் உடன் ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில் பகுதியில் பெரும் பொருட் செலவில் செட் அமைக்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது.


படப்பிடிப்பு நிறைவு:


இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக முன்னதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து முன்னதாக இயக்குநர் விஜய், ஏமி ஜாக்சன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் பகிர்ந்துள்ள அருண் விஜய், இயக்குநரின் மிகப்பெரும் கனவை நனவாக்க உழைத்த அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி. இயக்குநர் விஜய் மற்றும் அவரது திறமைமிக்க படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.


 






ஆக்‌ஷன் ஜானரில் தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அருண் விஜய்க்கு  முன்னதாக காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.


ஆயுர்வேத சிகிச்சை


லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள்  படமாக்கப்பட்டபோது அவருக்கு தசைநாரில் காயம் ஏற்பட்டதாகவும் ஆனால் படப்பிடிப்புக்கு இடையூறு நேரக்கூடாது என  சிகிச்சையை அருண் விஜய் தள்ளிப்போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  தொடர்ந்து பிசியோதரபிஸ்ட் உதவியுடன் அப்போதைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அருண் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் மூட்டு வலிக்காக அருண் விஜய் ஆயுர்வேத சிகிச்சைப் பெறும் புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.




இந்நிலையில், அருண் விஜய் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் முன்னதாக வாழ்த்தி வந்தனர். 1995ஆம் ஆண்டு கோலிவுட்டில் முறை மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமான அருண் விஜய், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தபோதிலும், பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகே திரைத்துறையில் கவனமீர்க்கத் தொடங்கினார்.


ஏறுமுகத்தில் அருண் விஜய்:


சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அருண் விஜய்யின் கரியர் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், 2015இல் அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் அருண் விஜய் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கி பயணித்து வருகிறார்.


அச்சம் என்பது இல்லையே படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் நடித்து அறிவழகன் வெங்கடாசலம் இயக்கியுள்ள ஸ்பை த்ரில்லரான பார்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.