நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும் திரைப்படம் ராக்கி.  படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கியிருந்தார். என்றோ வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் என்றாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அருண் மாதேஷ்வரனுக்கு முக்கிய நட்சத்திரங்களின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிகாயிதம் திரைப்படத்தை இயக்கியுள்ளார் அருண் மாதேஷ்வரன். அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை சமீபத்தில் தனுஷும் உறுதிப்படுத்தினார்.






தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஆமாம்..உங்கள் யூகங்கள் சரிதான்.அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அதிர்ஷசாலி நடிகர் நான்தான்..விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும்..ஓம் நம சிவாய” என  பதிவிட்டுள்ளார். இந்த படம் ஒரு வரலாற்று பிண்ணனியில் உருவாகும் கதை என கூறப்படுகிறது. தனுஷ் , அருண் மாதேஷ்வரன் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 2002 மே மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. 







இந்த நிலையில் தனுஷ் படத்தை இயக்குவதற்கு முன்னதாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதை ஒன்றை இயக்க இருக்கிறாராம் அருண் மாதேஷ்வரன் . அந்த படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை தனுஷ் படத்திற்கு முன்னதாக முடித்துவிட வேண்டும் என முனைப்பு காட்டுகிறாராம் இயக்குநர். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இதனை விக்னேஷ் சிவன் இயக்க , காதலர்கல் இருவரும் படத்தை தயாரித்துள்ளனர். படம் வருகிற பிப்ரவரி மாதம் காதலர்கள் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்க்கிறது. அதே போல இவர்கள் தயாரித்த மற்றொரு படமான கூழாங்கல் வெளியாவதற்கு முன்னதாகவே பல விருதுகளை குவித்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்கர் போட்டியிலும் கூட களம் கண்டது அந்த படம்.