தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை தக்க வைத்து கொண்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் அருள்நிதி. பாண்டிராஜ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் நடித்த மௌன குரு, டிமான்டி காலனி, பிருந்தாவனம், ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் அறியப்பட்டவர். அவருக்குக்கென ஒரு தனி ராசிகள் பட்டாளத்தை சேர்த்தவர்.



இயக்குநர் அஜய் ஞானமுத்து 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் மிகவும் எளிமையான ஒரு படமாக திரில்லர் ஜானரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அருள்நிதி திரைப்பயணத்திலும் மிக முக்கியமான படமாக அமைந்தது. தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகியுள்ளது.


 



அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கும் இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அர்ச்சனா சந்தோக், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.


'டிமான்டி காலனி 2 ' படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் அருள்நிதி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது பல ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் "எனக்கு பெருசா படம் பண்ணனும், பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணனும், பெரிய டீமோட ஒர்க் பண்ணனும் என ஆசை எல்லாம் இருக்கு. இல்லைனு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா அது கரெக்ட்டா அமையணும் இல்லையா. பாண்டிராஜுடன் நான் பண்ண முதல் படமான வம்சம் தேசிய விருது வாங்கி இருந்தது. ராதாமோகன், சிம்புதேவன், அறிவழகன் அவங்களோட எல்லாம் படம் பண்ணி இருக்கேன்.


மத்த பெரிய இயக்குநர்களோட கதைக்கு நான் தேவைப்படாம இருந்து இருக்கலாம். இல்லாட்டி அவங்களுக்கு என்னை விட பெட்டர் ஆப்ஷன் இருந்து இருக்கலாம். அடுத்து பெரிய பட்ஜெட் வைச்சு படம் பண்ணும் போது நான் நடிச்சா அது எடுக்க முடியுமா என தெரியாது. இல்லைனா உண்மையாகவே நான் தேவை பட்டு இருக்க மாட்டேன். தேவைப்பட்டா கண்டிப்பா கூப்பிடுவாங்க. அப்படி என்கிட்டே யாரும் வந்ததும் இல்ல. வந்த வாய்ப்பை நான் மிஸ் பண்ணதும் கிடையாது. கதைக்கு தேவையான விஷயம் எதுவாக இருந்தாலும் அதை நான் செய்வேன்" என பேசி இருந்தார் நடிகர் அருள்நிதி.