இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, 'பருத்திவீரன்' சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனிக்க.. லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ்  பிரைவேட் லிமிடெட்  சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஜி சரவணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வழங்குகிறார். 

Continues below advertisement

எதிர்வரும் 17 ஆம் திகதி தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த 'அருள்வான்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இணை தயாரிப்பாளர் திருமதி சுபா சரவணன், இயக்குநர் கணேஷ் விநாயகன், இணை தயாரிப்பாளர்கள் சரண், சரத் , நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட் , நடிகைகள் ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநர் இளையராஜா , ஒளிப்பதிவாளர் எம். சுகுமார், கலை இயக்குனர் லால்குடி' இளையராஜா ,சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நடிகர் காளி வெங்கட் பேசுகையில் : '' இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். மனிதர்களும், மிருகங்களும் நடமாட கடினமான மலைப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. மலைப்பகுதியில் முட்புதர்களாக இருக்கும் இடத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் பின்னோக்கி ஓடிக் கொண்டிருப்பார். நாங்கள் அவரை பின்தொடர்ந்து செல்வதே சவாலானதாக இருக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதே சவாலானதாக இருக்கும். 

Continues below advertisement

ஒரு நாள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு செல்வதற்கு எந்த வசதியும் இல்லை. நடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான 'டென்ட்'டை அவர்களே தூக்கிக் கொண்டு சென்று, ,அங்கு டென்ட் அடித்து தங்க வேண்டும். படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளூர் வழிகாட்டி ஒருவர் வேகமாக மலைப்பகுதியில் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்வது கடினமானதாக இருந்தது. ஓரிடத்தில் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்லும் போது 'திக் திக் 'என்று இருந்தது.  இவ்வளவு இருந்தும் இறுதி கட்ட படப்பிடிப்பில் இரண்டு நாள் என்னால்  கலந்து கொள்ள முடியவில்லை. அந்தப் படத்தில் சின்ன வேடத்தில் நடித்த எனக்கே அவ்வளவு சவால்கள் இருந்தது என்றால் ..இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும். அனைவருக்கும் இது கடினமான - மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் இப்படத்தின் காட்சிகளை இயக்குநர் எனக்கு காண்பித்த போது மிகவும்  உற்சாகமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் சுகுமார் ஏற்கனவே காட்டில் பிறந்த மனிதரைப் போலவே படமெடுப்பார். ஆனால் இந்த படத்தில் காட்டை வேறொரு கோணத்தில் காண்பித்திருக்கிறார். படத்தில் எல்லா படப்பிடிப்பு தளங்களும் மேகத்திற்கு மேலே தான் இருந்தது. அதாவது சொர்க்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது போல் இருந்தது. 

இவற்றையெல்லாம் கடந்து இப்படத்தின் கதை மிகவும் முக்கியமானது. அடிப்படைக் கல்வியைப் பற்றி பேசும் ஒரு படம். இந்த படம் வெளியான பிறகு நிச்சயமாக பேசப்படும். 

நடிகர் அருள்நிதி ஒரு படத்திற்கு சாதாரணமாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். அவருடைய கதை தேர்வு பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றால்... இந்தப் படம் மிக நன்றாக இருக்கும். இப்படத்தில் உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார். 

நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில் : '' இந்தப் படத்தின் கதையை கேட்பதற்கு முன் கிராமத்து கதைகளில் சிறிது நாட்கள் வரை நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். இருந்தாலும் இயக்குநருக்காக இந்த கதையை கேட்டேன். கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இந்த கதையில் நடிக்கலாம் என விரும்பினேன். ஏனெனில் இந்தப் படத்தின் கரு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

படிக்கும் போது ஒரு பள்ளியில் இந்த வசதி இல்லை... இது இல்லை... என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளோ வசதிகளோ இல்லை என்று.. நம் மண்ணிலேயே ஒரு இடம் இருக்கிறது... மக்கள் இருக்கிறார்கள்... அந்த நிலையிலும் மக்கள் வாழ்கிறார்கள்... என கேள்விப்பட்டவுடன் இதில் நிச்சயமாக என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். இதை என்னுடைய பொறுப்பாகவும் நினைத்தேன். இதுபோன்ற கதையை நம்பி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. 

வரைபடத்திலேயே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை... தொலை தொடர்பு வசதிகளே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை.... தூங்குவதற்கோ சாப்பிடுவதற்கோ எந்த வசதிகளும்  இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை... இந்த படத்தில் தான் நாங்கள் பார்த்தோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது. அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அங்கு செல்வதற்கு கடினமானதாக இருந்தாலும் அங்கு சென்ற பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டதும்.. அங்குள்ள மக்களுடன் உரையாடியதும்... மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடன் பழகி வாழும் போது அதுவும் சுவாரசியமாகவே இருந்தது. 

ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் இணைந்து ஏற்கனவே 'ரா ரா' என்ற ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் கிராமங்களை அழகியலுடன் காட்சிப்படுத்துவதை விட, இந்தப் படத்தில் பிரம்மாண்டமாக காண்பித்து இருக்கிறார். அதை இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியும் அற்புதமான விஷுவல்  ட்ரீட்டாக இருந்தது. 

அருள்நிதி- நம்பிக்கை நாயகன். இந்த படத்தில் அருள்நிதி சார் இருக்கிறார் என்று சொன்னவுடன்... என்னுடைய நண்பர்களும், தோழிகளும் 'அவர் இருக்கிறாரா..! அப்போ படம் நன்றாக இருக்கும். படம் வித்தியாசமாக இருக்கும் படத்தில் ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்' என்று சொல்கிறார்கள். அவர் அப்படி ஒரு நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்திலும் நிச்சயமாக ஒரு நல்ல விசயம் இருக்கிறது. அதைத்தான் அவரும் நம்பி இருக்கிறார். 

இந்தத் திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது என்று சொன்னவுடன் எங்களுடைய குழுவினரின் நம்பிக்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. இதற்காக அவருக்கு நன்றி. 

என்னுடைய சக நடிகர் ஆரவ். அற்புதமான அர்ப்பணிப்புள்ள நடிகர். நடிகர் காளி வெங்கட் சொன்னது போல் மலையில் செங்குத்தாக ஏறி,  அதன் பிறகு மேலே சென்று அங்குள்ள மரத்தில் ஏறி ஆரவ் நடித்தார். அதேபோல் அருவி ஒன்றின் கீழ் பகுதியில் நடுங்கும் குளிரில் அவர் உடல் முழுவதும் சந்தனத்தை பூசிக்கொண்டு நடித்தார். இவை எல்லாம் மிகவும் கடினமானது. நாங்கள் அனைவரும் அவர் உடனிருந்து பார்த்தோம். அவருடைய அர்ப்பணிப்பை கண்டு வியந்தேன். '' என்றார்.