இன்று வரும் எந்த படமாக இருந்தாலும், அதில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் இவரை நீங்கள் பாத்திருக்க வாய்ப்புண்டு. கலை இயக்குனராக அறிமுகமாகி, இன்றும் அந்த துறையின் தனித்திருந்தாலும், இடையிடையே நடிப்பிலும் அசத்திக் கொண்டிருக்கும் கலை இயக்குனர் கிரண், இயக்குனர் கனவோடு வந்து, ஆர்ட் டைரக்டர் ஆனவர். எப்படி நடந்தது இது, என்பதை இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி...





‛‛கலை என்பது என்ன என்று பலருக்கும் புரியவில்லை. முறையா படிச்சுட்டு வர்றவங்களுக்கே அது புரியுறது இல்லை. எடிட்டிங்ல இருக்குற ஆர்வம், நடனத்தில் இருக்கிற ஆர்வம், மியூசிக்ல இருக்குற ஆர்வம், கலை இயக்கத்தில் இருப்பதில்லை. ஆர்ட் டைரக்ஷன் என்றால் என்ன என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

நிறைய பேர் ஹீரோயின்களை ரசிக்கிறார்கள்; அவர்கள் அணிந்திருக்கும் உடையை ரசிக்கிறார்கள்,அதற்கு பின்னால் இருக்கும் கலை இயக்குனரின் பணியை அவர்கள் அறிவதில்லை. அதை நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும். ஆர்ட் டைரக்டர் என்றால், பாடல்களுக்கு மட்டும் தான் ஷெட்போடுவார்கள் என பலரும் நினைக்கிறார்கள். கலை இயக்குனரின் பணி, ஒரு படம் முழுக்க வரும். ஒரு கார் வருகிறது என்றால், அந்த கார் ஓட்டுபவர் யார் என்பதை அடையாளப்படுத்தும் விசயங்கள், காரில் இருக்க வேண்டும். அது ஆர்ட் டைரக்டர் வேலை தான். மிக நுணுக்கமான வேலைகளை கையாளும் பொறுப்பு ஆர்ட் டைரக்டர்களுக்கு உண்டு. ஆனால் அது யாருக்குமே தெரியாது. அவர்களுக்கு தெரியவில்லையே என்கிற வருத்தம் பெரிய அளவில் இருக்கும். சினிமாவுக்குள் வர வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. ஏனென்றால், என் அப்பா சினிமாவில் வர முயற்சித்தார். முடியாமல் போனது. அதன் பின், என் மூத்த அண்ணன் முயற்சித்தார், அவராலும் முடியாமல் போனது. எனது இரண்டாவது அண்ணன் முயற்சித்தார், அவரால் உள்ளேயே வரமுடியவில்லை.  இதனால் ஒரு கட்டத்தில் சினிமா மீது வீட்டிற்குள் வெறுப்பு வந்துவிட்டது. நான் முயற்சித்த போது, என்னை அனுமதிக்க அதுவே தடையாகவும் இருந்தது. 



நான் படித்த அரசு கலைத்துறை கல்லூரியில் படித்ததில், ஒரு சிலர் தான் நடிகராகினர். சிவக்குமார், பாண்டு சார் தான் நடிகராகினர். தோட்டதரணி, ஷாபிசிரில் சார் ஆகியோர் தான் கலை இயக்குனராகினர். ஒரு சிலர் இயக்குனராகினர். அப்போது கதிர் சார் இருந்தார். அவர் அங்கிருந்து தான் இயக்குனர் ஆனார். இப்போது, பா.ரஞ்சித் சார், அங்கிருந்து தான் இயக்குனர் ஆனார். நான் ஆர்ட் டைரக்ட் படிச்சிருந்தாலும், எனக்கு இயக்குனர் ஆசை தான் இருந்தது. 

நான் நன்றாக பெயிண்ட்டிங் வரைவேன். எனது பெயிண்டிங்கை எடுத்துச் சென்று, என் நண்பர் ஒருவர், உதவி இயக்குனராக சேர்ந்து கொண்டார். அதற்கான வாய்ப்பை பெற அவர் சென்ற போது, அதுபற்றி அவருக்கு தெரியாது என்பதால், உதவிக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு இயக்குனரிடம் அவர் ஆலோசிப்பதை அறியலாம் என நானும் சென்றேன். ஆனால், எங்கு ஆலோசித்த விசயங்கள் எனக்கு ஆர்வத்தை தந்தது. கலை இயக்குனராக தொடரலாம் என்கிற நம்பிக்கையை தந்தது. இனி இது தான் நமக்கான இடம் என நானே கலை இயக்குனராக முடிவு செய்து பயணப்பட்டேன்,’’ என அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.