சீரியல் நடிகர், நடிகை நிஜக் கதையும் சீரியல் போலத்தான் இருக்கும்போல என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிகர் அர்னவ் கதை.
திவ்யா கன்னடத்து பைங்கிளி, அர்னவ் தமிழர். இவர்கள் இருவரும் 5 ஆண்டுகள் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்தின்போது திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் அண்மையில் திவ்யா, கணவர் அர்னவ் மீது போலீஸில் புகார் கொடுத்தார். அவர் தன்னை கட்டாய மதமாற்றம் செய்தார். திருமணம் செய்து தாயாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டார். குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்றெல்லாம் அடுக்கடுக்காக அவர் போலீஸில் புகார் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அர்னவ் சென்னை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அர்னவ், "தான் திவ்யாவை அடித்து துன்புறுத்தவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக இருக்கின்றது. தன்னுடைய குழந்தையை கருக்கலைப்பு செய்யும் எண்ணத்துடன் திவ்யா செயல்படுகிறார். இதற்கு பின்னால் ஆர்ட்டிஸ்ட் ஈஸ்வரன் என்ற நபர் இருக்கிறார். திவ்யாவிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருப்பது தெரியும். ஆனால் அவர் ஒரு குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருவார். நான் பார்த்திருக்கிறேன். யார் குழந்தை என கேட்ட போது தன் அக்கா குழுந்தை என சொன்னார். அது பொய் என்று இப்போதுதான் தெரியவந்தது." என பேசியிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே இன்னொரு நடிகையின் பெயரும் அடிபடுகிறது. அந்த முஸ்லீம் நடிகை அர்னவை காதலிப்பதாக தன்னிடமே கூறியதாகவும். தன் கணவரை அந்த நடிகை அபகரிக்க நினைப்பதாகவும் திவ்யா கூறினார்.
இந்நிலையில் திவ்யா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அர்னவ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் திவ்யா, “நானும் அர்னவும் 5 ஆண்டுகள் காதலித்தோம். அவன் சொன்னதாலேயே மதம் மாறி திருமணம் செய்தேன். ஆனால் திருமண ஃபோட்டோவை போட்டது அவனுக்கு அவ்வளவு கோபம் தந்துள்ளது. அவன் கோபப்பட்டதால் அதை நான் டெலீட்டும் செய்தேன். ஆனால் அடுத்தநாளே அந்த கல்யாண புகைப்படம் ஒரு விளம்பரத்துக்கானது என்று அவன் கூறியபோதுதான் எனக்கு எல்லாம் புரிந்தது. என்னை காதலித்து திருமணம் செய்து கைவிட்டுள்ளான். எனக்கு நீதி வேண்டும். அர்னவின் ஃப்ரெண்ட்ஸ் கூட இப்போ என் பக்கம் தான் நிற்குறாங்க. என் மேல நியாயம் இருக்கிறதாலதான் அவுங்க என் கூட நிற்குறாங்க. டிவி மீடியாவில் என் மனைவி என் குழந்தை என்று சொல்லும் அர்னவ் ஏன் என் முன்னாடி வந்து பேசவில்லை. என்னை ப்ளாக் பண்ணி வச்சிருக்கான்.
என் கிட்ட பேசி 45 நாளைக்கு மேல் ஆகுது. ஒரே வீட்டில் ஆளுக்கொரு அறையில் இருக்கிறோம். நான் அவனிடம் எவ்வளவோ கெஞ்சிவிட்டேன். இப்போது கூட அர்னவ் பழைய ஆளாக திருந்தி திரும்பி வரணும்னு தான் நினைக்கிறேன். அர்னவ் பத்தி இப்போ என்னென்னவோ சொல்றாங்க. அவன் ஒரு ப்ளேபாய்னு சொல்றாங்க. எல்லாத்தையும் கேட்கும்போது இப்படியொரு ஆள் கூடவே வாழ்ந்தேன்னு இருக்கு” என்றார்.