நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற “வானவில்” படம் இன்றோடு 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


குரு பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கியிருந்தார். வானவில் படத்தில் அர்ஜூன், அபிராமி, பிரகாஷ்ராஜ், மணிவண்ணன், லட்சுமி, ரூபா ஸ்ரீ என பலரும் நடித்திருந்தனர். தேவா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படம் 2000 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளியானது. முதல்வன் படத்துக்குப் பின் வானவில் படம் வெளியானதால் ரிலீசுக்கு முன்னால் டிக்கெட் அனைத்து ஏரியாவில் விற்று தீர்ந்ததாக ஒரு தகவல் உண்டு 


படத்தின் கதை 


 சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் ரயிலில் அர்ஜூன், அபிராமி, பிரகாஷ்ராஜ் ஆகிய 3 பேரும் பயணம் செய்கிறார்கள். தங்களை அறிமுகம் செய்து கொண்ட பிறகு 3 பேரும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சிக்காக டெல்லி செல்வதும் தெரிய வர நண்பர்களாகிறார்கள். பயிற்சியின் போது அர்ஜூன், அபிராமி இருவரும் காதலிக்க, பிரகாஷ்ராஜூக்கு அபிராமி மீது ஒருதலை காதல் ஏற்படுகிறது. 


இதனிடையே பயிற்சியின் முடிவில் அபிராமி ஐஏஎஸ் ஆக தேர்வாகிறார். பிரகாஷ்ராஜ் ஐபிஎஸ் அதிகாரியாக மாறுகிறார். ஆனால் கிராமத்தில் தன் தந்தையை அரசு அதிகாரியை தாக்கியதால் போலீசில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அர்ஜூன் முடிவை UPSC வாரியம் நிறுத்தி வைக்கிறது. கலெக்டராக வருவேன் என உறுதியளித்ததால் அவர் தன் கிராமத்துக்கு செல்ல மறுக்கிறார். அதேசமயம் ஊட்டியில் அபிராமி வீட்டுக்கு செல்கிறார். 


அங்கு ஒருதலை காதல் விவகாரத்தில் பழிவாங்கும் பொருட்டு இளைஞர் ஒருவர் செய்யும் விபரீத செயலால் அபிராமியின் தங்கையான உமா தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஆத்திரத்தில் அந்த இளைஞனை அர்ஜூன் தாக்க, அவர் உயிரிழக்கிறார். கொலைக்குற்றத்துக்காக அர்ஜூன் சிறை செல்ல, அங்கு பிரகாஷ்ராஜ் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அபிராமி தன்னை காதலிக்காத கோபத்தில் பழிவாங்க, அர்ஜூனை டார்ச்சர் செய்கிறார். இதிலிருந்து அர்ஜூன் மீண்டாரா, ஐஏஸ் அதிகாரியாக ஆனாரா என்பதே இப்படத்தின் கதையாகும். 


கூடுதல் தகவல்கள் 


முதலில் கதாநாயகியாக சாக்ஷி அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அபிராமி நடித்தார். தேவா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பிரகாஷ்ராஜின் சிறந்த வில்லத்தனம் நிறைந்த படங்களுக்கு இப்படம் மிகச்சிறந்த உதாரணம். வானவில் படத்திற்காக பிரகாஷ் ராஜ் சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: KH234: ஒன்றிணைந்த நாயகர்கள்.. கமல் - மணிரத்னத்தின் க்யூட் ஃபோட்டோவுடன் தொடங்கிய KH234 கொண்டாட்டம்!