தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக விளங்குபவர் நடிகர் அர்ஜுன். பெரும்பாலன அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால் அவர் ஆக்ஷன் கிங் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார். 


ஹீரோ முதல் வில்லன் வரை :


முதல்வன், ஜென்டில்மேன், அரசாட்சி, சுதந்திரம், சுபாஷ், ரிதம், ஜெய் ஹிந்த், குருதிப்புனல், செங்கோட்டை, சேவகன், ஏழுமலை, மருதமலை என ஏராளமான ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். சமீபகாலமாக வில்லன் ரோல்களில் கலக்கி வரும் அர்ஜுன் தற்போது வெளியான 'லியோ' திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக கெத்தாக நடித்திருந்தார். 


 



ஐஸ்வர்யா அர்ஜுன் :


அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா 2013ம்  ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'பட்டத்து யானை" திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்தியிலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தற்போது அவரது தந்தை இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 


காதலுக்கு பச்சை கொடி :


கடந்த 2021ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கினார் நடிகர் அர்ஜுன். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி. அந்த சமயத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்டவே அவர்களின் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற உள்ளது.   


எளிமையாக நிச்சயதார்த்தம் :


ஐஸ்வர்யா - உமாபதி காதல் விவகாரம் இணையத்தில் வெளியாகி  வைரலானதை தொடர்ந்து தற்போது அவர்களின் நிச்சயதார்த்த அறிவிப்பும் இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஐஸ்வர்யா - உமாபதி திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். நடிகர் அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தத்தை இந்த மாதமே நடத்த உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



தம்பி ராமையாவின் மகனும் நடிகர் அர்ஜுனின் வருங்கால மாப்பிள்ளையுமான உமாபதி 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த திருமணம், மணியார் குடும்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதே போல ஐஸ்வர்யா நடித்த பட்டத்து யானை படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அர்ஜுன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேறு பட வாய்ப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா.