தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற அடையாளத்துடன் கம்பீரமாக வலம் வருபவர் நடிகர் அர்ஜூன். இன்றும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் மிரட்டும் வில்லனாக நடித்து வருகிறார். நடிகர் அர்ஜூனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா திருமணம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 


 




நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த அக்டோபர் 28ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் கோலாகலமாக வண்ணமயமாக எளிமையான முறையில் நடைபெற்ற அவர்களின் நிச்சயதார்த்த விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. 


மாப்பிள்ளை உமாபதிக்கு விலையுயர்ந்த மாணிக்க கல் பதித்த மோதிரம், மணமக்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள், விருந்தினர்களுக்கு பல மாநிலங்களை சேர்ந்த ஸ்பெஷல் உணவு என அனைவரும் அசந்து போகும் அளவுக்கு மிகவும் சிறப்பாக ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 


தற்போது ஐஸ்வர்யா - உமாபதி திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினருடன் முதல் திருமண அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


 



சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று இயக்குனர் ஷங்கர் மகள் மற்றும் ரோபோ ஷங்கர் மகள் திருமணத்தை காட்டிலும் பல மடங்கு பிரமாண்டமாக நடிகர் அர்ஜூன் தன்னுடைய மகள் திருமணத்தை பிளான் செய்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் திருமணம் கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜூன் கட்டியுள்ள அர்ஜூன் கார்டன்ஸில் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது எனக் கூறப்படுகிறது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த திருமண விழாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  


அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, விஷால் ஜோடியாக 'பட்டத்து யானை' திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு பெரிய அளவில் அவரை படங்களில் காணமுடியவில்லை. திருமணம், மாமியார் குடும்பம், தண்ணி வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் உமாபதி. 


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டார். அந்த சமயத்தில்  ஐஸ்வர்யாவுக்கு உமாபதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாற அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டினார்கள்.