வசந்தபாலன் இயக்கத்தில் இயக்குநர் ஷங்கர் வழங்கும் 'அநீதி' திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் அர்ஜூன் தாஸ், துஷாரா, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வசந்தபாலன் இயக்கிவரும் திரைப்படம் ‘அநீதி’.
இந்தப் படத்துக்கு வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதலில் பெயரிடப்படாமலேயே தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள படங்களில் நடைபெற்று வந்தது. படத்தின் பெயர் தெரியாது என அர்ஜூன் தாஸ், துஷாரா பகிர்ந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பையும் சுவாரஸ்யத்தையும் வரவழைத்து லைக்ஸ் அள்ளியது.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10ஆம் தேதி ‘அநீதி’ எனும் படத்தின் தலைப்பு, டைட்டில் டீசர் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
முன்னதாக மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் வரிகளில், ஜி.வி.பிரகாஷ் குமார் குரலில் ‘திகட்ட திகட்ட காதலிப்போம்’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது ‘அநீதி’ படம் வரும் 2023, பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இப்படத்தை அர்பான் பாய்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ள நிலையில் தற்போது இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரின் ’எஸ் பிட்சர்ஸ்’ வெளியிடுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், “நசுக்கப்பட்ட நம் ஒவ்வொருவரின் குரலாய் - அநீதி” எனக் குறிப்பிட்டு, அநீதி படம் பிப்ரவரியில் வெளியாவதை உறுதி செய்து ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.