'தி கேரளா ஸ்டோரி' படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கைக்கோர்த்துள்ளது கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.


தி கேரளா ஸ்டோரி:


சமீபத்தில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பி நாடு முழுவதும் பேசுபொருளான படம் 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த மே கடந்த மே 5ஆம் தேதி இப்படம்  திரையரங்குகளில் வெளியானது. அதா ஷர்மா, சித்தி இத்னானி, தேவதர்ஷினி ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், சுதிப்தோ சென் இப்படத்தை இயக்கியிருந்தார்.


உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், படத்தில் இஸ்லாமிய வெறுப்பும், வெறுப்பு பிரச்சாரங்களுமே மேலோங்கி இருந்ததாக நாடு முழுவதுமே கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வலுத்தன.


சுதிப்தோ சென்னுடன் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி:


பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தொடங்கி சமூக வலைதளவாசிகள் வரை பலரும் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில்,  மேற்கு வங்கத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாததால் 2 நாள்களில் இப்படம் இனி திரையிடப்பட மாட்டாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன. ஆனால் மற்றொருபுறம் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் உலகளாவிய வசூல் 250 கோடிகளைக் கடந்துள்ளது. இந்நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை முன்னதாக சுதிப்தோ சென் அறிவித்துள்ளார்.


சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுப்பதாக சுதிப்தோ சென் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும், பாடலாசிரியல் குல்சார் வரிகள் எழுதுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நெட்டிசன்கள் கண்டனம்:


இந்நிலையில், “இஸ்லாமிய வெறுப்பு பிரச்சார திரைப்படமான தி கேரளா ஸ்டோரி இயக்குநருடன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி கைக்கோர்க்கலாமா...” எனக் கூறி நெட்டிசன்கள் இணையத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். 


முன்னதாக கேரளா ஸ்டோரி படத்துக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஆர்.ரஹ்மான் கேரள மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நிகழ்ந்த திருமணத்தைப் பற்றிய வீடியோவைப் பகிர்ந்து பதிவிட்டிருந்தார். மேலும், “மனிதகுலம் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணமாக்குவதாகவும் இருக்க வேண்டும்” எனும் கருத்தையும் இந்த வீடியோவுடன் ரஹ்மான் பகிர்ந்திருந்தார். 


இந்நிலையில் “மதவெறியைத் தூண்டும் வகையில் படம் எடுத்த சுதிப்தோ சென்னுடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைக்கோர்த்தது அதிருப்தி அளிக்கிறது” என்றும், “ரஹ்மானுக்கு பணம் தான் ஒரே நோக்கமா” என்றும் அவரது ரசிகர்கள் உள்பட பலரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.</p






ஆனால் மற்றொருபுறம் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்புக்கொண்டு விட்டதாகவும் ரஹ்மான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


 






இந்நிலையில், எப்படியானாலும் ரஹ்மான் இந்தப் படத்தில் பணிபுரியாமல் கைவிட வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.