பரியேறும் பெருமாள் , கர்ணன் போன்ற  வெற்றி படத்திற்கு பிறகு  மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்துள்ளார். இரண்டே படங்களை இயக்கியிருந்தாலும் மாரி செல்வராஜ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அதிக கவனம் பெற்றவர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் அவர் கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியான செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.


தற்போது நடிகர் நடிகைகள் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. அதே போல படத்தில் காமெடியனாக வடிவேலுவும் , முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசிலும் நடிக்கவுள்ளதும் கன்ஃபார்ம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவி தயாரிக்கிறது என்பது கூடுதல் சுவாரஸ்யம்.







படத்தில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்த சூழலில் , தற்போது தேசிய விருது பெற்ற நாயகி கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம் படக்குழு. கர்ணன் படத்தில் மாரி செல்வராஜுடன் பணிபுரிந்த  தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.இயக்குநர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தையும், தனுஷை வைத்து ஒரு படத்தையும் இயக்கி முடித்த பின்னர்தான் உதயநிதியை இயக்குவார் என கூறப்பட்டது.  ஆனால் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் , இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


உதயநிதி ஒரு கல் , ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முன்னதாக கோலிவுட்டில் அவர் தயாரிப்பாளராக இருந்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.


தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் , விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் , அதன் பொருட்டு மிகப்பெரிய பட்ஜெட்டில் , சிறந்த கூட்டணியுடன் தனது இறுதி படம் இருக்க வேண்டும் என்றே மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைத்திருப்பதாக கிசு கிசுக்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இறுதியாக வெளியான சைக்கோ படத்தில் , அவரது நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. உதயநிதி தற்போது கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி மற்றும் பெயரிடப்படாத மகிழ் திருமேனி படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அருண் ராஜா காமராஜ்  இயக்குகிறார். இந்த படம் ஹிந்தியில் வெளியான 'ஆர்டிகிள்-15'ன் தமிழ் ரீமேக் ஆகும்.  இந்த படம் மற்றும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.