பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிட்ருந்த நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

ஏ.ஆர் ரகுமான் மருத்துவமனையில் அனுமதி:

இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹ்மானுக்கு இன்று காலை 7.30 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு கீரிம்ஸ் ரோடு  அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர். ரஹ்மான் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஆஞ்சியோ, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளி வந்தன. அங்கு இருதய துறையை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, கண்காணித்து வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் நீர்ச்சத்து குறைப்பாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

தலைவர்கள் நலம்  விசாரிப்பு: 

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஏ.ஆர் ரகுமான் உடல் நலம் குறித்து விசாரித்தனர். 

முதல்வர் ஸ்டாலின்

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!

துணை முதல்வர்: 

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்:

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து ஏ.ஆர் ரஹ்மான் தற்போது வீடு திரும்பியுள்ளார், மேலும் அவர் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெவித்ததாக கூறப்படுகிறது. 

ஏ.ஆர் அமீன் விளக்கம்: 

இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் வீடு திரும்பியதை அவர் ஏ.ஆர் அமீன் உறுதிப்படுத்தி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் எங்கள் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். என் தந்தைக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சற்று பலவீனமாக இருந்தது, அதனால் நாங்கள் தொடர்ந்து சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். 

ஆனால் அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வார்த்தைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் அக்கறையையும் தொடர்ந்த ஆதரவையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்! என்று தெரிவித்துள்ளார்.