தமிழ் திரையுலகில் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தை கொண்ட இயக்குனர்களில் ஏ.ஆர். முருகதாசும் ஒருவர். சிறந்த மற்றும் சமூகத்திற்கு தேவையான கதைக்களத்தை உருவாக்கி, தொழில்நுட்ப அம்சங்கள் மூலம் அதனை வெற்றி படமாக எடுப்பதில் கைதேர்ந்தவர். தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்கள் பலரையும் இயக்கியதோடு, இந்தியிலும் ஏ.ஆர். முருகதாஸ் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி தடம் பதித்தார்.
முதல் படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கி, தீனா என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆக்ஷன் கலந்த அதிரடி கதைக்களத்துடன் வெளியான அப்படத்தில் வைக்கப்பட்ட, "தல" என்ற அடைமொழியில் தான் அஜித் இன்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அதைதொடர்ந்து, ரமணாவில் விஜயகாந்த் உடனும், கஜினியில் சூர்யா உடனும் இணைந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இப்படங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இந்தியில் அமீர் கானை வைத்து கஜினி படத்தையும், தெலுங்கில் சிரஞ்சீவையை வைத்து ரமணா படத்தையும் ரீமேக் செய்தார்.
துப்பாக்கி (COURTESY: SPOTIFY)
மீண்டும் ஏழாம் அறிவு படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ், 2012ம் ஆண்டு முதல் முறையாக விஜயுடன் இணைந்து துப்பாக்கி எனும் வெற்றி படத்தை வழங்கினார். தொடர் தோல்விலகளால் துவண்டு கிடந்த விஜய்க்கு, துப்பாக்கி பெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் ரூ.100 கோடி வசூலையும் எட்டியது. இதையடுத்து, மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படம், தமிழ் சினிமாவில் விஜய்க்கு உச்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது.
ஆனால், அதைதொடர்ந்து வெளியான ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்கள், வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் மோசமான விமர்சனங்களையே எதிர்கொண்டன. குறிப்பாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், அவர் எடுத்த ஸ்பைடர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஏ.ஆர். முருகதாஸ் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.
இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Phantom எனும் VFX கம்பெனியின் தயாரிப்பில் உருவாக உள்ள புதியபடத்தை, அனிமேஷன் முறையில் இயக்க ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். கதை மற்றும் ப்ரீ-புரடக்ஷன் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும், நாயகனாக நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.