கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பெரும்பாலான திரைப்பிரபலங்கள் கருத்து தெரிவிக்காதது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்திய அளவில் அதிகம் கவனம் பெற்றுள்ள கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ள நிலையில், ஓய்வுப்பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த ஆணையம் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  


கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது. இப்படியான நிலையில் திரைத்துறையில் இருந்து நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், இயக்குநர் பா.ரஞ்சித் தவிர மற்ற யாருமே கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. 


தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வெளியிட்ட பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

 

இதேபோல் பா.ரஞ்சித் வெளியிட்ட பதிவில், "தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்!" என தெரிவித்துள்ளார் . இவர்களை தவிர்த்து திரைத்துறை பிரபலங்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.  இதனால் ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.