தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு திரையுலகில் 2005ம் ஆண்டு நாகார்ஜூனா நடிப்பில் வெளியான 'சூப்பர்' திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அனுஷ்கா, சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான 'இரண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
படங்களின் தேர்வு :
ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத அனுஷ்கா, 'அருந்ததி' திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்தார். அது அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தையும் பெயரையும் பெற்று கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். சிங்கம், தெய்வ திருமகள், தாண்டவம், வேட்டைக்காரன், வானம், இரண்டாம் உலகம், என்னை அறிந்தால், லிங்கா என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார்.
குறைந்த படவாய்ப்பு :
'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். சைஸ் ஜீரோ படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து நடித்தார். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். கடந்த ஆண்டு 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அனுஷ்கா. அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்த போதிலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருந்த கிரேஸ் சிறிதும் குறையாமல் அப்படியே இருந்தது.
பரவிய வதந்தி :
சில தினங்களுக்கு முன்னர் அனுஷ்கா திருமணம் குறித்த சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் நாகார்ஜூனாவின் மகள் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என வதந்திகள் பரவின.
அனுஷ்கா 50 :
தற்போது அனுஷ்கா ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் இயக்கும் வுமன் சென்ட்ரிக் படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது அவர் நடிக்கும் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் வெளியான 'வானம்' திரைப்படத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உருவாக இருக்கும் இந்த புதிய படம் தமிழிலும் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
ரசிகர்களின் விருப்பம் :
மிகவும் திறமையான நடிகை அனுஷ்காவுக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்தால் அது அவரின் திரைப்பயணத்தில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமையும். அதன் மூலம் மீண்டும் அனுஷ்கா சிறப்பான ஒரு கம் பேக் கொடுப்பார் என்பது அவரின் தீவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பு.