கங்கனா ரனாவத் மிகத் திறமையான நடிகர் என்றும் ஆனால் அவரிடம் பிற பிரச்சனைகள் தனக்கு இருப்பதாக இயக்குநர் அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.
அனுராக் கஷ்யப்
Gangs Of Wasseypur 1, 2, Girl on yellow boots, Dev D , Ugly உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். மாறுபட்ட கதைக்களங்கள், எதார்த்தத்திற்கு நெருக்கமான அணுகுமுறை, தனித்துவமான காட்சியமைப்புகள் என தனக்கென தனி அடையாளங்களைக் கொண்டவர் இயக்குநர் அனுராக் கஷ்யப்.
இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் இவரது படங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன. பாலிவுட் சினிமாவில் இருந்துகொண்டே பாலிவுட்டை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனது படங்களை வெளியிடுவதற்கு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார் அனுராக் கஷ்யப். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அனுராக் கஷ்யப் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பற்றி பேசினார்.
அபாரமான திறமைக் கொண்டவர்
கங்கனா ரனாவத் நடித்த குயின் திரைப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான ஃபாண்டம் பிலிம்ஸ் மூலம் வெளியிட்டார் அனுராக் கஷ்யப். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், பேசிய அனுராக், “கங்கனா ஒரு சிறந்த நடிகர். வேலை என்று வந்துவிட்டால் கடுமையாக உழைக்கக் கூடியவர். அவரது திறமையை அவரிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது. ஆனால் அவரிடம் மற்ற பிரச்சனைகள் இருக்கின்றன.’ என்று அவர் கூறினார்.
அனுராக் கங்கனா சர்ச்சை
கடந்த 2020 ஆம் வருடம் கங்கனா பேசிய காணொளி ஒன்றைப் பார்த்து அதற்கான தனது எதிவினையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அனுராக் கஷ்யப். “நேற்று இரவு நான் கங்கனாவின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். கங்கனா எனக்கு ஒரு நல்ல நண்பர். அவர் எப்போதும் என்னுடையப் படங்களுக்குகாக என்னை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். ஆனால் தற்போது இருக்கும் கங்கனாவை எனக்கு யார் என்று தெரியவில்லை. அவர் நடித்து மனிகர்னிகா படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து அவரது நேர்காணல் ஒன்றைப் பார்த்து நான் அச்சமடைந்திருக்கிறேன். சினிமாவிற்கு வெளியேவும் சரி, உள்ளேயும் சரி புகழ் மற்றும் அதிகாரத்தில் இருந்து யாரும் தப்பியதில்லை” அவர் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு கங்கனா அளித்த பதில் “என்னுடைய தேசத்தின் பெருமைக்கு எப்போது நான் குரல் கொடுப்பவராக இருப்பேன். ஒரு தேசியவாதியாக பெருமையும் சுய மரியாதையுடனும் நான் இருப்பேன் . ஒருபோது என்னுடைய கொள்கைகளுக்காக சமரசம் செய்துகொள்ள மாட்டேன் ஜெய் ஹிந்த் . “ என்று அவர் பதிவிட்டிருந்தார்.