காஷ்மீர் ஃபைல்ஸ் படம் மூலம், இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி.  இவரும், பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும்  ட்விட்டரில் மாறி மாறி ட்வீட் செய்து சண்டையிட்டு கொண்டது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


ட்விட்டரில் போர் :


பாலிவுட்டில் பிரபல இயக்குனர்களில் ஒருவராகவும் அவ்வப்போது நடிகராகவும் உலா வருபவர் அனுராக் காஷ்யப். காேலிவுட்டில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் “ருத்ரா” என்ற வில்லனாக கலக்கியிருப்பார். இவர், சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு நேர்காணலின் போது, காந்தாரா மற்றும் புஷ்பா படம் குறித்த தனது கருத்தினை கூறியிருந்தார்.


ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில், (Round Table Conference) “பலரின் சொந்த கதைகளை கூறுவதற்கு காந்தாரா மற்றும் புஷ்பா போன்ற படங்கள் உதவுகிறது. ஆனால், அந்த படங்களினால் நல்ல நல்ல படங்கள் தோல்வியை பெறுகின்றன”  என்று கூறியிருந்தார். இவர் கூறியதை பல செய்தி நிறுவனங்கள் தலையங்கமாக மாற்றின. அனுராக்கின் இந்த கருத்திற்கு, காஷ்மீர் பைல்ஸ் படத்தினை இயக்கிய விவேக் அக்னி ஹோத்ரி கண்டனம் தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டார். 




அக்னிஹோத்ரியின் கருத்து வேறுபாடு-அனுராக் பதிலடி!






காந்தாரா மற்றும் புஷ்பா படங்கள் குறித்த அனுராக்கின் கருத்துக்கு இயக்குனர் விவேக் அக்னி எதிர்ப்பதாக கூறி ஒரு ட்விட்டர் பதிவினை வெளிியட்டார். அதில், “பாலிவுட்டில் மிகப்பெரிய ஆளாக பார்க்கப்படும் இவரது கருத்திலிருந்து நான் முற்றிலுமாக வேறுபடுகிறேன். நீங்கள் இவரது கருத்துகளை ஏற்றுக் கொள்கின்றீர்களா?” என கேள்வியெழுப்பியவாறு விவேக் அக்னி ஹோத்ரி தனது பதிவில் குறிப்பிட்டுருந்தார். இதற்கு உடனே, அனுராக் தனது பதிலை இன்னொரு ட்விட்டர் பதிவின் வாயிலாக கூறினார். 


 






விவேக்கின் ட்விட்டருக்கு பதில் தெரிவித்த அனுராக், “ஐயா, உங்களது படங்கள் போலவே ட்வீட்டையும் சரியாக ஆராயாமல் வெளியிட்டிருக்கிறீர்கள். அடுத்த முறை சரியாக ஆராய்ந்து பார்த்து எழுதுங்கள்” என பதிலடி கொடுத்தார். 


அனுராக் இந்த கருத்தின் மூலம், “காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை எடுப்பதற்காக விவேக் செலவு செய்த நான்கு வருட ஆராய்ச்சி வீண்” என்பதை மறைமுகமாக கூறிவிட்டதாக சில இணையவாசிகள் கருத்து தெரிவித்தனர். இதனால், அனுராக்-விவேக் அக்னி ஹோத்ரியைத் தாண்டி இவரது ரசிரக்களுக்குள்ளும் ட்விட்டரில் சண்டை மாண்டது. இதையடுத்து விவேக் அக்னி ஹோத்ரி அனுராக்கின் பதிவிற்கு மற்றுமொறு பரபரப்பு பதில் ஒன்றை கொடுத்துள்ளார். 


விவேக்கின் பதிலும்-கேள்வியும்:


அனுராக்கின் மேற்கண்ட ட்விட்டர் பதிவினால் செம டென்ஷனான விவேக், அவரிடம் சில கேள்விகள் கேட்டு இன்னொரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில், “காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை எடுப்பதற்காக செலவு செய்யப்பட்ட நான்கு வருட ஆராய்ச்சி எல்லாம் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். விமானப் படுகொலை, பண்டிதர்கள் படுகொலை இவையனைத்துமே பொய் என நிரூபியுங்கள் பார்க்கலாம். இதையெல்லாம் பொய் என நிரூபியுங்கள், நான் அடுத்த முறை எந்த பிழையையும் செய்யாமல் இருக்கிறேன்” என கடுகடுவென பொறிந்து தள்ளினார். 






வழக்கமாகவே சமூக வலைதள சண்டைகளை கண்களுக்கு குளிர்ச்சியாக பார்க்கும் இணைய வாசிகள், இந்த இரண்டு இயக்குனர்களின் சண்டையையும் ரசித்து வருகின்றனர்.