சர்ச்சையையும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவையும் எப்போதுமே பிரிக்க முடியாது. செய்யும் செயல் , பேசும் பேச்சு, சமூக வலைத்தள பதிவு இவ்வளவு ஏன் இவர் இயக்கும் படங்கள்  என அனைத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு சர்ச்சை பிரியர் இவர். தெலுங்கு சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வருகிறார் ராம் கோபால் வர்மா. இவர் வாயை திறந்தாலே பிரச்சனைகள்தான். சமீபத்தில் கூட ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் ஆக்கிரமித்த விவகாரம் தொடர்பாக சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அதேபோல வருண் தேஜ், சாய் தரம் தேஜ், பவன் கல்யாண், ராம் சரண் போன்ற குடும்ப  ஒட்டுண்ணிகள் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வெற்றியை உறிஞ்சி வாழ்கின்றனர் என்றார். இப்படியாக கடந்த காலத்தை புரட்டி பார்த்தால் இவரின் சர்ச்சை கருத்துகளுக்கு பஞ்சமே இருக்காது. 




இந்நிலையில் ராம் கோபால் வர்மா, இனாயா சுல்தானா தெலுங்கு நடிகை ஒருவருடன் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இனய சுல்தானா தற்போதுதான் சில தெலுங்கு படங்களில் தலைக்காட்ட தொடங்கியுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கும் அடுத்த படத்திலும் ஒரு ரோலில் நடிக்க உள்ளாராம்  இனாயா சுல்தானா.  சமீபத்தில் நடந்த இனாயா சுல்தானாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற ராம் கோபால் வர்மா பர்த்டே பேபியுடன் நடனமாடியுள்ளார். "ஹே ராமா எ கியா ஓஹ்கா” என்ற பாடல் ஒலிக்க அதற்கு நடனமாடியுள்ளனர் இருவரும்.


ராம் கோபால் வர்மா எல்லை மீறி நடனமாடிய அந்த வீடியோ இணையத்தில் கசிய, மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ட்விட்டரில் அதற்கு பதிலளித்த இயக்குநர் “இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. அது அமெரிக்க அதிபர் ஜோ பைடன்போல் இருக்கிறது. அந்த பெண் நடிகை இனாயா சுல்தானா இல்லை” என வீடியோவை பகிர்ந்திருந்தார். தாலிபன்கள் விவகாரத்திலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து சீண்டிக்கொண்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா.






மேலும் இந்த சர்ச்சையை பொருட்படுத்தாத நடிகை இனாயா சுல்தானாவும் ராம் கோபால் வர்மாவின் இந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்திருந்தார். அதேபோல அந்த நடன வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் நடிகை. இரண்டு நாட்கள் கழித்து ராம் கோபால் வர்மா அந்த பெண்ணுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து “வைரல் வீடியோவில் என்னுடன் நடமாடிய  அழகிய டான்ஸிங் பார்ட்னர் இனாயா சுல்தானா” என கேப்ஷன் கொடுத்திருந்தார். சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மாவின் அந்த  நடன வீடியோ  மீண்டும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.