‛நான் அம்மன் இல்லை... நான் அருளாசி வழங்குவதில்லை...’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த அன்னபூரணி அரசு அம்மா, நேரிலும் , வாட்ஸ்ஆப் மூலமும் தீட்சை வழங்கி வந்த அன்னபூரணி அரசு அம்மா, அவர் பேசியதை அவரே முறியடித்து, அம்மன் வடிவமாகி வணக்கத்திற்குரியவராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். 



கடந்த ஜனவரியில் தொடங்கி, இன்று வரை பேசும் பொருளாக மாறி வரும் அன்னபூரணி அரசு அம்மா, பேஸ்புக் சாமியாராக அருளாசிகளை அள்ளி வீசி வருகிறார். தினம் ஒரு தகவல் மாதிரி, மணிக்கு ஒரு அருளாசியை வழங்கி வரும் அன்னபூரணி அரசு அம்மா, இடையிடையே தன் பக்தர்களின் அருள் அனுபவங்களை, அவரே பகிர்ந்தும் வந்தார். 



என்னதான், கடவுள், ஆன்மிகம் இவற்றுக்கு புதிய அடையாளத்தை அவர் தர நினைத்தாலும், நம்மூரில் ஆன்மிகம் என்றால், அதற்கென சில அக்மார்க் அடையாளத்தை சாமியார்கள் சிலர் உருவாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் , இனி இதெல்லாம் எடுபடாது என முடிவு செய்த அன்னபூரணி அரசு அம்மா. வழக்கமான சாமியார்களின் வழியில், ‛அம்மா’ ஆக இருந்ததில் இருந்து ‛அம்மன்’ ஆக மாறினார். 


கையில் சூலாயுதம் ஏந்தி, தலையில் கிரீடம் ஏந்தி, ரம்யா கிருஷ்ணனின் டூப் போல, சிவப்பு கம்பளத்தில் நடந்து வர, 100 ரூபாய்க்கு வாங்கிய பூவை, ஒவ்வொன்றாக மலர் பாதத்தில் தூவி, அதுவும் பாதியில் முடிய, வெறும் கையில் முலம் போட்டு, ஆத்தாவை அழைத்து வந்து ஆசிரமத்தில் அமர செய்துள்ளனர். 



சூலம் ஏந்தி சுட்டெரிக்கும் தாயாக மாறுவார் என்று பார்த்தால், வழக்கமான தன் ‛வைபிரேட்’ கண்ணீர் அருளாசியோடு, அதே நாற்காலியில் அமர்ந்து அருளாசியை தொடங்கியுள்ளார் அன்னபூரணி. அம்மாவின் இந்த புதிய கெட்டப், அவரது குழந்தைகளை(பக்தர்களை அப்படி சொன்னால் தான் அவருக்கு பிடிக்கும்) ரொம்பவே மகிழ்வித்திருக்கிறதாம். 


ஆடி மாதத்தில் எல்லாரும் அம்மனை வேண்டுவார்கள்; ஆனால், இங்கு ஒரு அம்மா, தன்னை அம்மனாக மாற்றியிருக்கிறார். என்னே ஒரு முன்னேற்றம். இனி அன்னபூரணி அரசு அம்மா, அன்னபூரணி அரசு அம்மனாக மாறுவார் என்றே தெரிகிறது. திருவண்ணாமலையை திருவிழாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, இனி சூலத்தோடு அதற்காக சூலுரைப்பார் என்றே தெரிகிறது. 


திருவண்ணாமலையில் ஆசிரமம் திறந்து பல மாதங்கள் ஆகியும், இன்னும் எதிர்பார்த்த கூட்டம் கூடாதது, அன்னபூரணிக்கு வருத்தத்தை அளித்துள்ளது. தனது கருத்துக்கள் இன்னும் பலரிடம் சென்றடையவில்லை என்கிற குறையை போக்கவே, இதுமாதிரியான அடையாள அணிவகுப்புகளை அவர் நடத்துவதாகவும், விரைவில் அன்னபூரணியையும் அவரது சக்தியையும் அறிந்து, பலரும் அவரிடத்தில் வருவார்கள் என்றும், அன்னபூரணியை விமர்சிப்பவர்கள், விரைவில் அவரை புரிந்து கொள்வார்கள் என்றும் அன்னபூரணியின் தீவிர பக்தர்கள் சிலர் கூறுகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண