சர்சைகள் தொடர்ந்தால், அல்லது சர்ச்சைகள் சுற்றிக் கொண்டிருந்தால், அதுவே அன்னபூரணி அரசு அம்மா. தீட்சை என்கிற பெயரில் தினமும் பக்தர்களுக்கு ஆன்லைன் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் அன்னபூரணி அரசு அம்மா, சிறிது நேரத்திற்கு முன் பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் ‛உங்களைத் தேடுங்கள்’ என்கிற தலைப்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த கருத்து...



 

‛‛

உங்களை தேடுங்கள்...

உங்கள் ஒவ்வொருவரையும் இயங்க வைத்துக் கொண்டு இருக்கும் இயக்க சக்தியே இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து, உணர்வு மயமாகி அனைத்து இயக்கங்களையும் நடத்திக் கொண்டு இருக்கிறது. அதுவே அனைத்துமாய் வியாபித்து இருக்கிறது. அதன் பெயரே இயற்கை, இறைவன், இறைத்தன்மை, அல்லாஹ், பரமபிதா, நிர்வாணம் என்பதெல்லாம்.



இதையே தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்றும் அவனின்றி அனுவும் அசையாது என்றும் அவனே அனைத்துமாய் இருக்கிறான் என்றும் நீயே அதுவாகிறாய் என்றும் இன்னும் எத்தனை முறைகளில் கூறிக்கொண்டு இருந்தாலும், அனைத்து மதங்களின் நோக்கமும், அறுதி உண்மையும் இதுவாக இருந்தாலும், மனிதனின் புறத் தேடல் மட்டும் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.



புறத்தில் தேட அது வேறொன்றாக அல்லவா இருக்க வேண்டும். இரண்டற்ற ஒன்றை எங்கு உங்களால் தேட முடியும். எங்கு தேடினாலும் உங்களுக்கு அது கிடைக்கப் போவது இல்லை. இது நீங்கள் உங்களையே வெளியில் தொலைத்து விட்டேன், மறுபடியும் தேடுகிறேன் என்பது போன்றது. அதை வெளியில் தேடாதீர்கள் அது வீண் கால விரையம்.



சற்றே பார்வையை உங்களை நோக்கி திருப்புங்கள் அது எப்படி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை பாருங்கள், அதையறிந்து அதிலேயே நிலைபெருங்கள். அப்பொழுது உணர்வீர்கள் நீங்கள் அதுவாகவே இருக்கிறீர்கள் என்று.உங்கள் உடலின் செயல்களுக்குப் பின்னால், உங்களின் எண்ணங்களுக்குப் பின்னால், உங்கள் மனதிற்கும் மனதில் பதிவாகி இருக்கும் உணர்ச்சிகளுக்கும் பின்னால் இவற்றையெல்லாம் இயக்கும்

அறிவிற்குப் பின்னால் அறிவையும் இயக்கும் உங்கள் நான் என்ற ஆணவத்திற்கு பின்னால் இவை அனைத்தும் இயங்க ஆதாரமான இயக்க சக்தியாக உணர்வாக அதுவே ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது.



அதுவே நீங்கள். இதை எப்படி உங்களால் வெளியில் தேடி அடைய முடியும். உடலில் நிலைபெறுபவன் உடலாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறான், மனதில் நிலைபெற்றவன் மன உலகத்திலேயே வாழ்கிறான். அறிவில் நிலைபெற்றவன் அறிவாளியாக வாழ்கிறான். உணர்வில் நிலைபெற்றால் மட்டுமே அதுவாக (நீங்களாக, இறைத்தன்மையாக ) வாழ முடியும்.





இதற்கு நீங்கள் அறிவாளியாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அடி முட்டாள் கூட உணர்வில் நிலைபெற்றால் அவனால் அண்ட சராசரங்கள் பற்றியெல்லாம் பேசமுடியும். ஏனென்றால் அதுவே மெய்யறிவாக இருக்கிறது.மெய்யறிவின் முன்னால் நீங்கள் கற்றுக்கொண்ட அறிவும், உங்கள் புத்திசாலித் தனங்களும் வெறும் குப்பைகளே, அப்பொழுது மட்டுமே உங்களால் உணர முடியும் 'அறிவே தெய்வம்' என்றால் என்னவென்று.



அது தெரியாமல் தான் நீங்கள் கற்றுக்கொண்ட அறிவைத்தான் தெய்வம் என்று கூறுகிறார்கள் என்ற மனமயக்கத்திலேயே வாழ்ந்து வாழ்க்கையை தொலைக்கிறீர்கள்,’’

இவ்வாறு அந்த பதிவில், அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார். 

அனைத்து மத கடவுள்களுக்கு புதுவித விளக்கம் அளித்துள்ள அன்னபூரணி அரசு அம்மாவின் கருத்து, புதுவித சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.