திருவண்ணாமலையில் திவ்ய தரிசனம் அளித்து வரும் அன்னபூரணி அரசு அம்மா, நேரில் விட, பேஸ்புக்கில் அதிக அருளாசிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் நிகழ்த்தும் அருளாசிகள் கொஞ்சம் விபரமாகவும், நிறைய விவகாரமாகவும் இருக்கிறது. இதோ அன்னபூரணி அரசு அம்மாவின் சமீபத்தில் பேஸ்புக் ஆசி மடல்..

 



‛‛புத்தகம் வழிகாட்டியே.

சமுதாயத்தில் பெரும்பாலோர் ஆன்மிகத்தை நன்றாக அறிந்து வைத்து இருக்கின்றனர். எப்படி பள்ளிகளில் பாடம் படித்து ஒவ்வொரு பாடத்தையும் மனப்பாடம் செய்து அடுத்தவர்களிடம் ஒப்பித்து காட்டுவோமோ அதைப்போன்றே ஆன்மிகத்தையும் படித்து மனப்பாடம் செய்து, அறிந்து வைத்து இருக்கிறார்கள். இதையே ஆன்மிகம் என்றும், தானே ஆன்மிகவாதி என்றும் நினைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.



உங்கள் படிப்பு உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிறதா? இல்லையே. வாழ்க்கை என்பது முழுவதும் அனுபவம் சார்ந்ததாக அல்லவா இருக்கிறது. அதை எந்த பாடப்புத்தகத்தில் படிக்க முடியும். ஆன்மிக வாழ்வு என்பது சாதாரண வாழ்வையும் ஊடுறுவிச் செல்லும் வாழ்வல்லவா, அதேபோல் வெளித்தன்மையில் செயல்பட்ட மனதை உள்முகமாக திருப்பி தன்னை உணர வேண்டிய வாழ்வல்லவா? அதை எப்படி புத்தகத்தில் படிக்க முடியும்.



ஒவ்வொருவரும் தனக்குள் வாழ்ந்து அனுபவித்து உணர வேண்டிய வாழ்வை எப்படி புத்தகத்தில் வாழ முடியும். புத்தகம் என்பது ஒரு வழிகாட்டி மட்டுமே. வழிகாட்டியிலே மயங்கி நின்று கொண்டும் அதையே தலையில் சுமந்து கொண்டும் இருந்தால் எப்பொழுது அந்த வழிகாட்டி (புத்தகம்) காட்டிய இலக்கை அடைவது. அதை அனுபவத்தில் நின்று அல்லவா உணர முடியும்.





இருப்பது ஒன்றே என்கிறான். அனைத்துமே அதாலேயே ஆனது என்கிறான், நானே கடவுள் என்கிறான், சக்கரங்கள் எத்தனை, என்னென்ன பெயர், என்னென்ன கலர் என்றெல்லாம் கூறுகிறான். தலைக்கு மேல் ஆயிரம் இதழ் தாமரை என்கிறான். ஏதாவது ஒரு அனுபவமாவது இருக்கா என்றால் எதுவுமே இல்லை. ஆனால் பேசுவது மட்டும் இரண்டற்ற ஒன்றாகி ஒருமை நிலையிலேயே பேசுகிறான். எண்ணங்கள் கடந்த நிலை, மனம் கடந்த நிலை, உணர்வில் நிலைபெற்ற நிலை இதில் எந்த ஒரு அனுபவமும் இன்றி பிரம்ம நிலையை பற்றி பேசுகிறான்.



ஏன் இப்படி பேசுகிறான் என்பதை ஆராய்ந்தால் அவனும் அனுபவிக்கும் ஆர்வத்தில் ஏதேதோ செய்து, எங்கெங்கோ சென்று ஏமாந்து பல வருடங்கள் தியானமும், யோகமும் செய்தும் சிறிது அனுபவங்கள் தவிர, அனுபவங்கள் எதுவும் இன்றியே இருப்பதாலேயே, பேசி அதை நிறைவேற்றிக் கொள்கிறான். ஆனால் மற்றொருவனோ எந்த முயற்சியும் இன்றியே இதை மட்டுமே பொழுது போக்காக மாற்றி இருக்கிறான்.



ஆன்மிகம் என்பது அனுபவத்தில் நிலைபெற்று உணர வேண்டிய ஒன்றாகும். ஆன்மிக வாழ்வு என்பது நீங்கள் வாழும் சாதாரண வாழ்வையே ஆனந்தமாக வாழக் கற்றுக்கொள்ளும் கலையாகும். ஒவ்வொருவரும் தன்னையே அனுபவித்து, ஆராதித்து, கொண்டாடி மகிழ முடியும்.





இதுவே ஆன்மிகம். தன்னை உணர்தல் என்பதும், ஆன்மிக அனுபவங்கள் என்பதும், தன்னிலேயே அமைதியிலும் ஆனந்தத்திலும் லயித்திருப்பது என்பதும் ஒவ்வொருவருமே அனுபவித்து உணர முடியும்,’’ 

என்று தனது பேஸ்புக் பதிவில் அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார்.