அன்னபூரணி அரசு அம்மா வருகிறார் என நேற்று தான்  செய்தி வெளியானது, இன்று தடை வாங்கும் அளவிற்கு நிலை மோசமாகிவிட்டது. பேஸ்புக், ட்விட்டரை ஒட்டுமொத்த குத்தகைக்கு ஆக்கிரமித்துள்ள அன்னபூரணி அரசு அம்மாவின் கண்டெண்ட் தான், எங்கும் நீக்கமென நிறைந்து நிற்கிறது. ஜனவரி 1 முதல் செங்கல்பட்டியில் தன் ஆன்மிக சேவை தொடங்க தயாராக இருந்த அன்னபூரணி அரசு அம்மாவின் முயற்சிக்கு டிசம்பரிலேயே மூடுவிழா கட்டிவிட்டது சமூகவலைதளம். டிசம்பர் 19 ம் தேதி செங்கல்பட்டில் நடத்திய முன்னோட்ட நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றதால், அதே பார்மட்டில் ஜனவரி 1 புத்தாண்டில் புதுமை படைக்க காத்திருந்தார் அன்னபூர்ணி அரசு அம்மா. 


ஆனால், அதற்குள் வலைவாசிகள் நுழைந்து, 2020ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், தன் கணவரை பிரிந்து, மற்றொருவரின் கணவரோடு தன் காதல் பயணத்தை தொடங்கிய அன்னபூரணியின் ‛என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...’ நிகழ்ச்சியை, மாத்தி மாத்தி ட்ரோல் செய்து, ஒரே நாளில், அன்னபூரணியை தரணி முழுவதும் கொண்டு சேர்த்துவிட்டனர்.



அதன் விளைவு, தற்போது செங்கல்பட்டில் கடந்த 19ம் தேதி அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடத்தியதாக, அன்னபூரணி மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளது காவல்துறை. போதாக்குறைக்கு ஜனவரி 1 நடப்பதாக இருந்த நிகழ்ச்சிக்கும் தடை விதித்துள்ளது. இதுவரை அதற்கான அனுமதி பெறாத நிலையில், முன்கூட்டியே இந்த முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். 


இரண்டாவது நாளாக, அன்னபூரணி அரசு அம்மா மீதான சர்ச்சை ஓயாத நிலையில், இதுவரை அவர் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், கோடிட்ட இடத்தை நிரப்புவது போல், ஆளாளுக்கு தெரிந்ததை, புரிந்ததை எழுதி ஒருவழி செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால், நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த அன்னபூரணி அரசு அம்மா, தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


அதில்,


மக்கள் அனைவருக்கும் வணக்கம்,

அம்மாவை பற்றி தவறான வதந்திகள் youtube news channel களில் பரப்ப பட்டு வருகிறது. இதற்கான அனைத்து விளக்கங்ளும் media மூலம் விரைவில் அம்மா உங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்துவார்.

- Amma Devotee


இவ்வாறு அந்த அறிவிப்பில் அன்னபூரணி அரசு அம்மா சார்பில், டிவோட்டி என்கிற பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்மா வந்து என்ன சொல்வார்... என எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்த உலகம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண