பிரபல மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன். இவர் பெங்களூர் டேஸ், கூடே, உஸ்தட் ஹோட்டல் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வொண்டர் வுமன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகைகள் பார்வதி நித்யா மேனன், அமிர்தா சுபாஷ் பத்மப்ரியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வொண்டர் உமன் திரைப்படம் நவம்பர் 18 அன்று சோனி லைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், திரைப்பட விமர்சனம் குறித்தும் விமர்சகர்கள் குறித்தும் விமர்சித்துள்ளார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு விமர்சகர் சினிமா விமர்சனம் எழுதும் போது, அவருக்கு முதலில் ஒரு படம் எப்படி உருவாகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதல் வேண்டும். அவர்களது மேலாளர்கள் அவர்களிடம் திரைப்பட உருவாக்கம் குறித்து ராஜ்கபூரிடமும், எடிட்டிங் குறித்து ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியிடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இந்த மாதிரி பிரபல நபர்களிடமிருந்து தான் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பல சினிமா விமர்சகர்களுக்கு ஒரு திரைப்படத்தை எப்படி விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதலே இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
மேலும் ரசிகர்களும் விமர்சகர்களும் ஒரு படத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் எப்படி அதை விமர்சிக்கிறார்கள் என்று அவர் பேசியுள்ளார். மேலும், பலர் படத்தில் லேக் இருப்பதாக கூறுகின்றனர். எனக்கு அந்த வார்த்தையே புரியவில்லை. ஏனெனில் லேக் என்று அவர்கள் குறிப்பிடுகையில் அவர்களுக்கு எடிட்டிங் பற்றி ஏதாவது தெரிகிறதா? என்று எனக்கு தோன்றும். லேக் என்பதில் அவர்கள் படத்தின் வேகம் குறித்து பேசுகின்றனர். ஒரு படத்தின் இயக்குனர் தான் அதனை முடிவு செய்ய வேண்டும் அல்லவா என்று அவர் கூறியுள்ளார்.
அஞ்சலியின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் கொதித்து எழுந்துள்ளனர். இயக்குனர் அஞ்சலி மேனன் ரசிகர்களை அவமதிப்பாதாகவும், ஒரு படத்தை காசு கொடுத்து பார்ப்பவர்கள் எவரும் விமர்சிக்கலாம் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.