கூலி படத்திற்கு அடுத்தபடியாக கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸின் மிக முக்கியமான படமாக உருவாக இருக்கும் கைதி 2 படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது

கைதி 2க்கு யார் இசையமைப்பாளர்

மாநாகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தின் கவனமீர்த்தாலும் அடுத்ததாக வெளியான கைதி 2 திரைப்படம் லோகேஷ் கனகராஜூக்கு இயக்குநராக பெரும் அடையாளத்தை கொடுத்தது. பாட்டு , நாயகி இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருந்த திரைக்கதையை பலரும் பாராட்டினர். லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸின் ஆரம்ப புள்ளி கைதி படத்தில் இருந்தே தொடங்கியது. தற்போது கூலி படத்திற்கு அடுத்தபடியாக கைதி 2 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தயாராகி வருகிறார். ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் மிக முக்கியமான படமாகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவும் கைதி 2 இருந்து வருகிறது. கமல் , சூர்யா, கார்த்தி , ஃபகத் ஃபாசில் என எல்.சி.யுவில் இடம்பெற்ற அத்தனை நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஆனால் இப்படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது .

கைதி முதல் பாகத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும் பின்னணி இசை பெரியளவில் பாராட்டப்பட்டது. விக்ரம் வேதா தொடங்கி  பல படங்களில் சிறப்பான இசையை வழங்கியிருந்தாலும் மற்ற இசையமைப்பாளர்களைப் போல் சாம் சி.எஸ் பெரியளவில் கவனிக்கப்படவில்லை என்கிற வருத்தம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. கைதி 2 படம் அவருக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள் .

இப்படியான நிலையில் கூலி படத்தின் ரிலீஸூக்கு பின் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் தன்னுடைய எல்லா படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பார் என்றும் சினிமாவில் இருந்து விலகுவது வரை தானும் அனிருத் இணைந்து பணியாற்றுவோம் என லோகேஷ் தெரிவித்திருந்தார். அப்படியென்றால் லோகேஷ் அடுத்தபடியாக இயக்கவிருக்கும் கைதி 2 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.