Anirudh Kavya Reception: அனிருத் - காவ்யா  திருமண வரவேற்பு விழாவில்  அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றன.

Continues below advertisement

அனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழா:

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதாராபத் அணியின் உரிமையாளர் காவ்யா கலாநிதி மாறனின் திருமணம், நடப்பாண்டில் தமிழ்நாட்டின் மிகவும் கவனிக்கத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது. நெருங்கிய குடும்ப உறவினர்கள் மட்டும் பங்கேற்ற திருமண விழா க்ரீஸில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையிலான வரவேற்பு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

Continues below advertisement

முதலமைச்சர்கள் தொடங்கி நட்சத்திர வீரர்கள் வரை..

இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர்  மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி துணை குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதலமைச்சர் சதீஷன் உள்ளிட்டோருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரையுலகில் இருந்து கமல், கார்த்தி, அட்லீ தொடங்கி அர்ஜுன் வரையிலான பல்வேறு பிரமுகர்களும் அங்கு வந்து இருந்தனர். இதுபோக சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களும் விழாவில் பங்கேற்றனர். இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் புதுமண ஜோடியின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: IND Vs NZ: 17 ஆண்டுகால காத்திருப்பு..! வெல்லிங்டனில் சாதிக்குமா கில் படை? பும்ரா & கோ மிரட்டுமா?

விழாவில் பங்கேற்காத 3 பேர்

ஏராளமானோர் அனிருத் - காவ்யா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், 3 முக்கிய நபர்கள் பங்கேற்காதது ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது. அதன்படி, மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், அனிருத்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தனுஷ் மற்றும் பல படங்களில் இணைந்து பணியாற்றிய அஜித்குமார் ஆகியோரும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அனிருத்தின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்க கூடிய 3 பேரும் நிகழ்ச்சிக்கு வராதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை அழைப்பே விடுக்கப்படவில்லையா எனவும் சந்தேகிக்கின்றனர்.

என்ன ஆச்சு?

  • 3 திரைப்படத்தின் மூலம் அனிருத்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதே தனுஷ். தொடர்ந்து பல்வேறு படங்களில் சேர்ந்து பணியாற்றிவர்கள், திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சேர்ந்து பணியாற்றுவதை நிறுத்தினர். தொழில்முறையை தாண்டி ரஜினிகாந்தின் முன்னாள் மாப்பிள்ளை என்ற அடிப்படையிலும் இருவரும் உறவினர்கள் ஆவர். அப்படி இருந்தும் வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்கவில்லை.
  • சிவகார்த்திகேயன் தன்னுடன் சேர்ந்து அறிமுகமாகி ஒரே நேரத்தில் திரைத்துறையில் தங்களுக்கான இடத்தை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையில் தனக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் சகோதரர் என பல முறை அனிருத் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இருவரும் பல சூப்பர் ஹிட் படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். அப்படி இருந்தும் நேற்றைய நிகழ்வில் அவர் பங்கேறகவில்லை
  • வேதாளம், விவேகம் மற்றும் விடாமுயற்சியை தொடர்ந்து தற்போது டேர்டெவில் படத்திலும் அஜித்குமாருடன் சேர்ந்து அனிருத் பணியாற்றி வருகிறார். இதனால் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலை மனைவி ஷாலினியுடன் அஜித் காரில் பயணிக்கும் வீடியோ வெளியாக, அந்த நிகழ்ச்சிக்கு தான் வருகிறார்கள் எனவும் கூறப்பட்டது. ஆனால் அஜித்குமார் அங்கு வரவே இல்லை.