தமிழ் திரையுலகில் பொல்லாதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் டேனியல். இவர் பையா, ரௌத்திரம் படங்களில் நடித்த அவர்,  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து மியாவ், மரகத நாணயம், ரங்கூன், இரண்டாம் குத்து, சக்கப்போடு போடு ராஜா, லாபம், மாநாடு, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். 


இவர் தற்போது நடிப்பு பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதா ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய டேனி, சற்றே ஆவேசமாக பல கருத்துகளை தெரிவித்தார். அவர் தனது உரையின் போது, “இரண்டு விதமான மனிதர்களை பார்க்கிறேன். ஒன்று முன்னாடி எல்லாம் என்னை சினிமாவுல கொண்டாடுனாங்க. இப்ப கண்டுக்கவே மாட்டுகாங்க. அவார்டு தான் தரல. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு கூட கூப்பிடல என சொல்வார்கள். 


மற்றொருவர் நம்ம நிகழ்ச்சி வராம எப்படி இருப்பேன் என சொல்லிவிட்டு போன் எடுக்காமல் இருப்பவர்கள். இதெல்லாம் தாண்டி பக்காவா ஸ்கெட்ச் போட்டு வராமல் இருப்பவர்கள் என இருக்கிறார்கள். இதனை நான் தொடங்கும் போது நஷ்டமாகி விடும் என காதுபடவே சொன்னார்கள். ஒன்றே ஒன்று சொல்கிறேன். உங்களை கூப்பிடுபவர்கள் பெரிய பெரிய அவார்டு தான் தர்றனும் என்றால் நீங்கள் வீட்டுலேயே தான் உட்காரணும். நாங்க, இந்த பசங்க நடிப்பு சார்ந்த விஷயமாக தான் கொண்டு போறோம். 


நான் சினிமாவுக்கு போராடி  வர்றப்ப எனக்கு கைகொடுக்க யாரும் கிடையாது. இந்த கலை உலகுக்கு வர ஆசைப்படுற பசங்களை கைகொடுக்க நினைக்கிறேன். இதன் மூலம் எனக்கு 10 பைசா லாபம் இல்லை. கலையை நேசிப்பதால் தான் இதை செய்கிறேன். ராதாரவி அண்ணன் சொன்னது போல வராதவங்க பத்தி பேசுறதை விட, வந்தவங்களை வாழ்த்திட்டு போனானு சொன்னார். 


அதானால வராதவங்களுக்கு ஒரு கேட்டை போடுறேன். இங்க வந்துருக்கவங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ராதாரவி அண்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது உங்க மூலமா நான் கொடுக்க ஆசைப்படுறேன். அதுக்காக ஒருத்தருக்கு போன் அடிச்சா இன்னும் எடுக்காம இருக்காரு. இந்த மாதிரி சூழலில் என் மீதான பாசம், கலை மீதான மரியாதையால் அவர் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்” என தெரிவித்தார்.