கேரள இளம் நடிகர் சரத் சந்திரன் திடீரென மறைந்தார். அவரது அகால மரணம் திரையுலகினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சரத் சந்திரனுக்கு 37 வயது தான் ஆகிறது. ஆரம்பத்தில் ஐடி ஊழியராகவே சரத் சந்திரன் பணியாற்றி வந்தார். அவருக்கு சினிமா மேல் இருந்த காதலால் திரைத்துறையில் வாய்ப்பு தேடி வந்தார்.


அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. முதன் முதலில் அனீசியா என்னும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் 2017ல் ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ் திரைப்படம் அவரை மலையாள திரையுலகு தாண்டியும் சினிமா ஆர்வலர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது. அந்தப் படத்தில் சரத் சந்திரன் அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.


கேரளாவில் உள்ள அங்கமாலி என்ற ஊரில் உள்ள ஓர் இளைஞர் பட்டாளம் பற்றிய கதை தான் அங்கமாலி டைரீஸ். மொத்தப் படமும் அந்த இளைஞர்களின் வாழ்க்கையை சுற்றியே பிண்ணப்பட்டிருக்கும். நாயகனாக நடித்த சரத் சந்திரனின் கதாபாத்திர பெயர் வின்சென்ட் சிறு வயதில் உருவாக்கிய நட்பு வட்டத்தை கல்லூரி காலத்திலும் மெயின்டெய்ன் செய்கிறார். பின்னர் ஏற்படும் காதலும், காதல் தோல்வியும், புதிய காதலும், தொழில் வெற்றியும், போட்டியும், சண்டையும், கொலையும், வழக்குகளும் தான் படத்தின் கதை.


சரத் சந்திரன் கொச்சியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது தந்தை சந்திரன், தாயார் லீலா. சரத்துக்கு ஒரு சகோதரும் இருக்கிறார். அவர் பெயர் ஷ்யாம் சந்திரன். இந்நிலையில் இன்று சரத் சந்திரன் அவர் வீட்டில் இறந்து கிடந்தார்.
அவரது மரணம் இயல்பானதா அவர் ஏதும் நோய்வாய்ப்பட்டிருந்தாரா இல்லை அவர் தற்கொலை செய்யப்பட்டாரா இல்லை இது கொலையா என்ற எந்த விவரமும் வெளியாகவில்லை.


அங்கமாலி டைரீஸ் தவிர கூடே, ஒரு மெக்சிக்கன் அபராதா ஆகிய படங்களிலும் சரத் சந்திரன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருந்தார்.


 



நடிகர் ஆண்டனி வர்கீஸ் தான் முதன் முதலில் சரத் சந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவர் அங்கமாலி டைரீஸ் படத்தில் சரத் சந்திரனின் இடம்பெற்ற காட்சியை பகிர்ந்து இளைப்பாறுங்கள் சகோதரரே என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.


அங்கமாலி டைரீஸ் படத்தில் சரத் சந்திரனுடன் ஆண்டனி வர்கீஸும் நடித்துள்ளார். அண்மையில் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா வெற்றிகண்ட விக்ரம் படத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்திருக்கிறார்.