Andrea Jeremiah : சுதந்திர தின வாழ்த்துக்களை ட்வீட் செய்த ஆண்ட்ரியா... பிசாசு 2 டீம்
2014ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "பிசாசு". பாலா தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ராதாரவி, நாகா, ப்ரயாகா மார்டின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் 2 பாகம் தற்போது வெளியாகவுள்ளது.
ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் வழங்கும் பிசாசு 2:
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாக இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் மே மாதம் வெளியானது. ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கார்த்திக் ராஜா. கார்த்திக்ராஜா - மிஷ்கின் இணையும் முதல் படம் பிசாசு 2 . சிவா சாந்தகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி வெளியீடு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிசாசு 2 திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் புது போஸ்டர் ஒன்று சமீபத்தில் தான் வெளியானது.
ஆண்ட்ரியா ட்வீட்:
75வது சுதந்திர தினத்தை ஒட்டி ஆண்ட்ரியா ஜெர்மையா தனது சுதந்திர தின வாழ்த்துக்களை இந்திய மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான, வளமான ஒரு சிறந்த இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உயர்த்துவோம். எங்கள் பிசாசு 2 படக்குழுவினர் அனைவரின் சார்பாக இந்திய மக்கள் அனைவர்க்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். என்று அந்த பதிவில் ஆண்ட்ரியா கூறியுள்ளார்.