தென்னிந்திய சினிமா ஏராளமான பன்முக கலைஞர்களை கடந்து வந்துள்ளது. அவர்களில் ஒருவர் தான் நடிகை, பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களை காட்டி அதில் வெற்றி நடையும் போட்டவர்தான் ஆண்ட்ரியா. இந்த சகலகலா நாயகியின் 38வது பிறந்தநாள் இன்று. 


தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான படைப்புகளுக்காக  அறியப்படும் இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், ராம், செல்வராகவன் உள்ளிட்டோரின் தேர்வாக ஆண்ட்ரியா என்றுமே இருந்துள்ளார். 



முதல் நடிப்பு அனுபவம் : 


2005ம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் தலைகாட்டிய ஆண்ட்ரியாவுக்கு 'பச்சைகிளி முத்துச்சரம்' திரைப்படம் மூலம் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இசையால் அனைவரையும் கவர வேண்டும் என ஆசைப்பட்டவர் மெல்ல மெல்ல நடிகையாக பரிணாமம் எடுத்தார்.  


சேலஞ்சிங்கான கதாபாத்திரம் : 


'வடசென்னை' படத்தில் மிகவும் சேலஞ்சிங்கான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இருப்பினும் அப்படத்தில் நடித்தால் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பாதித்ததாக தெரிவித்து இருந்தார். கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்காமல் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் மட்டுமே நடித்து வருகிறார். மலையாள திரையுலகிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகையான ஆண்ட்ரியா ஃபஹத் ஃபாசில் ஜோடியாக 'அன்னையும் ரசூலும்' படத்தில் நடித்தற்காக நல்ல வரவேற்பை பெற்றார்.



கொண்டாடிய ரசிகர்கள் :


புஷ்பா படத்தில் இடம் பெற்ற மெகா ஹிட் பாடலான 'ஊ சொல்றியா மாமா.. ஊஹூம் சொல்றியா மாமா..." பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்று வரை வைப் செய்யும் ஒரு பாடலாக இருந்து வருகிறது. இப்பாடலை வெகு சிறப்பாக பாடியதற்காக ஆண்ட்ரியாவை கொண்டாடி தீர்த்தனர். 


அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஆண்ட்ரியாவுக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர்கள் என்றால் அது நிச்சயம் டி.எஸ்.பி தான் என அவரே பல இடங்களில் வெளிப்படையாக கூறியுள்ளார்.


உயரமான நடிகை : 


மிகவும் உயரமான தென்னிந்திய நடிகர்களில் ஒருவரான ஆண்ட்ரியாவுக்கு வுமன் சென்ட்ரிக் படங்களில் நடிக்க மிகவும் விருப்பப்படுவதாக அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரின் உயரம் அவருக்கு பல இடங்களில் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. அப்படி அவருக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு தான் 'ஆயிரத்தில் ஒருவன்' கேரக்டர். 


வரவிருக்கும் படங்கள் : 


சைலேஷ் கொளனு இயக்கத்தில், வெங்கடேஷ் மற்றும் நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. மேலும் இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகும் 'நோ என்ட்ரி' படத்தில் லீட் ரோலிலும்  நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.    


மிகவும் துணிச்சலான ஒரு மனோபாவம் கொண்ட ஆண்ட்ரியா பழகவும் மிகவும் ஃப்ரெண்ட்லியானவர். இந்த பிறந்தநாள் அவருக்கு சிறப்பான ஒரு பிறந்தநாளாக அமைய வாழ்த்துக்கள்...