தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று கொண்டாடப்படும் பவன் கல்யாணின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஓஜி. பவன் கல்யாணின் கடந்த படம் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
252 கோடி ரூபாய் வசூல்:
இந்த சூழலில் வெளியான ஓஜி திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சாஹு திரைப்படத்தை இயக்கிய சுஜித் இந்த படத்தை இயக்கியுள்ளார். கேங்ஸ்டர் படமான இந்த படம் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படம் வசூலை குவித்து வருகிறது.
படம் வெளியான கடந்த 4 நாட்களில் மட்டும் ரூபாய் 252 கோடியை ஓஜி படம் வசூலித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதனால், படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரூ.500 கோடி கலெக்ஷனா?
சாஹு படத்துடனும் தொடர்புபடுத்துவது போல இந்த படத்தில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும். இதன் விடுமுறையை முன்னிட்டு இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், படம் ரூபாய் 500 கோடி வசூலை நெருங்குவதற்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து ப்ரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இம்ரான் ஹாஷ்மி நடித்துள்ளனர்.
படக்குழு மகிழ்ச்சி:
தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரவி கே சந்திரன், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளனர். சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் படத்தின் பட்ஜெட்டை கடந்து லாபத்தை ஈட்டியிருப்பதால் தயாரிப்பு தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம், இந்த படத்திற்கு ரூபாய் 1000 வரை டிக்கெட் விற்பனை செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்தது. அதிக கட்டணத்திற்கு படத்தின் டிக்கெட்டை விற்பனை செய்ததே ஓஜி திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.